Thursday, August 11, 2011

பனீர் பட்டர் மசாலா

தேவையான பொருட்கள் :

பனீர் - அரை கிலோ
தக்காளி - அரை கிலோ
பெரிய வெங்காயம் - அரை கிலோ
பூண்டு - 15 பல்
இஞ்சி - ஒரு அங்குலத் துண்டு
குடை மிளகாய் - 2
கொத்தமல்லி தழை - 2 கொத்து
வெண்ணெய் - 100 கிராம்
தனி மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
கொத்தமல்லி தூள் - ஒரு மேசைக்கரண்டி + ஒரு தேக்கரண்டி
சீரகத் தூள் - ஒன்றரை தேக்கரண்டி
கரம் மசாலா தூள் - 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
பட்டை - 2 துண்டு
கிராம்பு - 4
எண்ணெய் - 2 கப்

செய்முறை :

பெரிய வெங்காயத்தை தோல் உரித்து துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். தக்காளியை கழுவி விட்டு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். பூண்டை தோல் உரித்து எடுத்துக் கொள்ளவும். இஞ்சியை தோல் சீவி துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். குடை மிளகாயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.


முதலில் வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பனீரை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்துக் கொள்ளவும்.


மற்றொரு வாணலியில் ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயத்தை போட்டு 2 நிமிடம் வதக்கி எடுத்துக் கொள்ளவும். மேலும் ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி தக்காளியை போட்டு 2 நிமிடம் வதக்கி எடுத்துக் கொள்ளவும். ஆறியதும் வெங்காயம், தக்காளி இரண்டையும் தனித்தனியாக மிக்ஸியில் போட்டு அரைத்து எடுத்துக் கொள்ளவும். இஞ்சி, பூண்டு இரண்டையும் மிக்ஸியில் போட்டு விழுதாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.


ஒரு பாத்திரத்தில் வெண்ணெயை போட்டு உருக்கி அதில் பட்டை, கிராம்பு தாளிக்கவும்.


பிறகு இஞ்சி, பூண்டு, விழுது போட்டு ஒரு நிமிடம் வதக்கவும். அதனுடன் வெங்காய விழுதை ஊற்றி பச்சை வாசனை போகும் வரை 2 நிமிடம் வதக்கவும்.


பின்னர் தக்காளி விழுதை ஊற்றி 3 நிமிடம் கிளறி விட்டு வேக விடவும்.


அதில் சீரகத் தூள், கொத்தமல்லி தூள் போட்டு கிளறவும். அதனுடன் மிளகாய் தூள் போட்டு நன்கு கிளறி விட்டு 2 நிமிடம் கழித்து, வதக்கிய குடை மிளகாய், உப்பு, மஞ்சள் தூள் போட்டு நன்கு கிளறவும்.


பிறகு பொரித்து வைத்துள்ள பனீர் துண்டங்களை போட்டு ஒரு நிமிடம் கிளறிவிட்டு வேகவிடவும்.


அத்துடன் ஒரு கப் தண்ணீர் ஊற்றி ஒரு கொதி வந்ததும் எடுத்து குக்கரில் ஊற்றி கொதிக்க வைக்கவும்.


கொதித்ததும் ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் மேலே ஊற்றி ஒரு தேக்கரண்டி வெல்லத் தூள் போட்டு கிளறவும். பிறகு கொத்தமல்லி தழை மற்றும் ஒரு தேக்கரண்டி கொத்தமல்லித் தூள் போட்டு மூடி விடவும்.


இரண்டு விசில் வரும் வரை வேகவைத்து பிறகு இறக்கவும். சூடாக பரிமாறவும். நாண், சப்பாத்தி, பரோட்டா போன்றவற்றிற்கு பொருத்தமான பக்க உணவு இது

No comments: