Thursday, March 21, 2013தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகங்களும் கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்டு ஆன்லைனில் இணைக்கப்பட்டுள்ளன. முதுகலை பட்டப்படிப்புகள்,பொறியியல், மருத்துவம், உயர் தொழில்நுட்ப கல்வித்தகுதிகளை பதிவு செய்ய ஆன்லைன் பதிவு முறை 2001 ல் கொண்டுவரப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் பதிவு செய்துள்ள அனைத்து கல்வித்தகுதிகளையும் கொண்ட பதிவுதாரர்களை இணைக்கும் புதிய ஆன் லைன் சாப்ட்வேர் "சுசி லினக்ஸ்” என்ற பெயரைக்கொண்ட இப்புதிய சாப்ட்வேரை எல்காட் நிறுவனம் உருவாக்கி கொடுத்துள்ளது.

தமிழகத்தில் இதுவரை வேலைவாய்ப்பு அலுவலகங்களுக்கு நேரில் சென்றுதான் கல்வித் தகுதியைப் பதிவு செய்ய முடியும் என்ற நிலை இருந்து வந்த நிலையில், தற்போது அனைத்துப் பணிகளையும் வீட்டிலிருந்தபடியே ஆன்லைனில் செய்து கொள்ள முடியும். ஏற்கெனவே வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்தவர்கள், இந்த இணைய தளத்தில் தங்களது பதிவு எண்ணை உள்ளிட்டு தங்களது கல்வி விவரங்களை சரிபார்த்துக் கொள்ள முடியும்.

இன்று நாம் புதியதாக ஆன்லைனில் பதிவு செய்வது எப்படி என்று பார்ப்போம். இதற்கு குடும்ப அட்டை, சாதி சான்றிதழ், 10th (or) 12th மதிப்பெண் அட்டை கண்டிப்பாக கையில் வைத்திருத்தல் வேண்டும். முதலில் இணையதள முகவரி www.tnvelaivaaippu.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று click here for new user ID registration என்று இருக்கும் ( உதாரணத்திற்கு மேலே உள்ள படத்தை பார்க்கவும்) அதை கிளிக் செய்தால் ஒரு விண்டோ ஓபன் ஆகும் அதில் I agree என்று சொடுக்கி அடுத்து வரும் பக்கத்தில்
பதிவு செய்யும் விண்ணப்பதாரரின் பெயர், ஈமெயில் முகவரி, user id என்ற இடத்தில் புதியதாக ஒரு ID கொடுக்கவும், பின்பு அப்பா பெயர், பிறந்த தேதி,குடும்ப அட்டை எண்ணையும் Image Code என்ற இடத்தில் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் codeஐ கொடுத்து Save செய்தால் உங்களுகென்று ஒரு ID Create ஆகி விடும். அடுத்து வரும் பக்கத்தில்

உங்களது Personal detail, Contact detail, Qualification detail, Technical detailஆகியவற்றை பூர்த்தி செய்து Save செய்தால் உங்களது Register Number Createஆகிவிடும்.

குறிப்பு 1 : Qualification detail பூர்த்தி செய்தவுடன் add என்று பட்டன் இருக்கும் அதை கிளிக் செய்தால் ஒரு சின்ன விண்டோ ஓபன் ஆகும் அதில் கிளிக் செய்து Save கொடுக்கவும். இதே போன்று Technical Detailம் செய்ய வேண்டும்.

குறிப்பு 2 : மேலே சொன்ன அனைத்தும் முடிவடைந்தவுடன் Home பகுதிக்கு சென்று பார்த்தால் Print ID Card என்று இருக்கும் அதை கிளிக் செய்து பிரிண்ட் எடுத்து கொள்ளலாம்.

குறிப்பு 3 : ஏதேனும் தவறாக செய்திருந்தால் Home பகுதியில் Modify Contactஇருக்கும் அதில் சென்று மாற்றி கொள்ளலாம்.

குறிப்பு 4 : Update Profileல் சென்று Renewal செய்து கொள்ளலாம்.

Renewal செய்வதற்கான குறிப்பு :
உதாரணத்திற்கு Register Number இப்படித்தான் இருக்கும்.

Register Number : ARD2012M00007502

வேலைவாய்ப்பு அலுலகத்தின் குறியீட்டு எண்: ARD - என்பது ( வேலைவாய்ப்பு அலுவலகம், அரியலூர் )
பதிவு செய்த ஆண்டு : 2012
ஆண் / பெண் : M
பதிவு எண் : 7502

பதிவு எண் என்பது 8 இலக்க எண்ணாக இருத்தல் வேண்டும், அப்படி இல்லாமல்4 இலக்க எண்ணாக இருந்தால் முன்னதாக 4 பூஜ்ஜியங்களை சேர்த்துக்கொள்ளவும்.

User ID : ARD2012M00007502
Password : dd / mm / yyyy

கடவு சொல்லில் உங்களது பிறந்த தேதியை கொடுக்கவும்.
உங்களது ID CARD இப்படிதான் இருக்கும்..
அவ்வளவு தான் நண்பர்களே.. இனி கால விரையமுமின்றி வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம்.

Monday, March 11, 2013

தலைவன் ஆசிரியர்!

தலைவன் ஆசிரியர்!

"நம்ம அரசாங்கம் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு நிறைவான ஊதியம், ஒரு மாதம் வரலைன்னாலும் சம்பளம், மழை பெய்தால் விடுமுறை, சம்பளத்துடன் கூடிய பயிற்சி, பெண் ஆசிரியர்களுக்குப் பேறுகால விடுமுறை ஆறு மாதம்... இவ்வளவும் கொடுக்குது. அது போக, மாணவர்களுக்கு நாலு முறை சீருடை, பாடப் புத்தகங்கள், எழுதுபொருட்கள், காலணினு படிப்பதற்குத் தேவையான அடிப்படை வசதிகளைச் செஞ்சு கொடுக்குது. இவ்வளவு சலுகை, வசதிகளுக்குப் பிறகும் கிராமப்புற மாணவர்களுக்குத் தரமான கல்வி கிடைக்கலைன்னா, தப்பு அரசாங்கம் மேல இல்லை. நம்ம மேலதான்!''- அமைதியாக, அதே சமயம் அழுத்தமாகப் பேசத் துவங்குகிறார் கருப்பையன். தன் 37-வது வயதில் தேசிய நல்லாசிரியர் விருதுபெற்ற கருப்பையன், 'சாட்டை’ பட தயாளனைத் தூக்கிச் சாப்பிடும் சாதனைகளைச் சத்தம் இல்லாமல் செய்த ஆசிரியர்!

புதுக்கோட்டையை அடுத்த நெடுவாசல் வடக்குப் பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணிபுரியும் கருப்பையன், டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது முதல் சமூக சேவைக்கான பல விருதுகளைப் பெற்றுள்ளார். சமூக சேவை..? கருப்பையன் மாற்றியிருப்பது ஒரு பள்ளியை மட்டுமல்ல... ஒரு கிராமத்தை, ஒரு சமூகத்தை!

ஒரு தனிமனிதன் நினைத்தால், இவ்வளவு மாற்றங்கள் சாத்தியமா என்று அதிசயிக்கவைக்கிறது கருப்பையனின் கதை.

''நான் சின்னச் சின்னதாக் கூலி வேலை செஞ்சுட்டேதான் படிச்சேன். பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் எடுத்த 462 மதிப்பெண்கள்தான் என் வாழ்க்கையைத் தீர்மானிக்கும் தன்னம்பிக்கையைக் கொடுத்தது. 1988-ல அரசுப் பள்ளி ஆசிரியர் ஆனேன். ஏழு வருஷம் உதவி ஆசிரியர் பணி. அப்ப பள்ளிக்கூட அமைப்பில் நிறைய மாற்றங்கள் கொண்டுவரணும்னு நினைப்பேன். ஆனா, சுத்தி இருக்கிறவங்களிடம் இருந்து சரியான ஒத்துழைப்பு இல்லை. நாம சொல்றதை மத்தவங்க கேட்கணும்னா, அதுக்குத் தலைமை ஆசிரியர் ஆவதுதான் ஒரே வழினு காத்திருந்தேன். 14 வருஷங்கள் கழிச்சு தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கிடைச்சது. அப்போ பயிற்சிக்காக புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள நெடுவாசல் வடக்குப் பள்ளிக்கு வந்தேன். அந்த சுத்துவட்டாரத்தில் இருந்த வடக்கிகாடு, குயவர் தெருக் கிராமங்கள் கிட்டத்தட்ட 50 வருஷங்கள் பின்தங்கி இருந்தன. அங்கே ஒரு சமூகத்தைச் சேர்ந்த மக்கள் பகல்ல கூலி வேலைக்குப் போயிட்டு, ராத்திரியில் வேட்டைக் குப் போவாங்க. 50 வயசு ஆண்கள், ரொம்பச் சின்ன வயசுப் பெண்களைத் திருமணம் செஞ்சுக்குவாங்க. குயவர் தெருவில் சராசரியா ஒருத்தருக்கு நாலு மனைவிகள் இருப்பாங்க. நெருங்கிய உறவினர்களுக்குள்ளேயே திருமணம் செஞ்சுக்கிறதால, பிறக்கும் குழந்தைகள் மந்தத்தன்மையுடன், உடல்நலக் குறைவுடன் இருக்கும்.அங்கே இருந்த ஒரே ஒரு தொடக்கப் பள்ளியும் இடிந்து விழும் நிலையில் இருந்தது. அந்தக் கிராமங்களின் நிலைமையையே மாத்தணும்னு முடிவு பண்ணேன்.

நெடுவாசல் தொடக்கப் பள்ளிக்கு பணிமாற்றம் கேட்டேன். கிடைக்கலை. மாவட்ட ஆட்சியரிடம், 'ஒரு அரசாங்கத் தொடக்கப் பள்ளி எப்படி இருக்கணும்னு அரசாங்க விதிகள் சொல்லுதோ, அப்படி அந்தப் பள்ளியை மாத்துறேன். இல்லைன்னா, என் மேல் துறைரீதியா நடவடிக்கை எடுங்க’னு சொல்லி பணிமாற்றம் கேட்டேன். என் உறுதியைப் பார்த்த ஆட்சியர், என்னைப் பணிமாற்றம் செய்தார்.

நெடுவாசல் வடக்குத் தொடக்கப் பள்ளிக்குத் தலைமை ஆசிரியராக முதல் நாள் பொறுப்பேத்துக்க வர்றேன். என் அறையில் தலைமை ஆசிரியரின் நாற்காலி இல்லை. 'எங்கே?’னு கேட்டேன். 'மூணு மணிக்கு வரும்’னு சொன்னாங்க. சரியா மூணு மணிக்குக் கொண்டுவரப்பட்ட நாற்காலியில் எண்ணெய் வடியுது. மஞ்சள் தூள், ரோஜா இதழ்கள் ஒட்டியிருக்கு. விவரம் கேட்டா, அந்த ஊர்ல இறந்தவங்களை மயானத்துக்குக் கொண்டுபோற வரைக்கும் சாத்திவைக்க அந்த நாற்காலியைத்தான் பயன்படுத்துவாங்களாம். சினிமாவில் காட்டப்படும் காட்சிகளைவிட மிக மோசமா இருந்தது நிலைமை!

மாற்றத்தைச் சமூகத்தின் பங்களிப்பு இல்லாமல் செய்ய முடியாது. அதனால், பள்ளிக்கூடத்தின் நிலைமையை மாற்ற நான் மட்டும் ஆசைப்பட்டாப் போதாதே. என் தொழில், கற்பித்தல். அதுக்கு முதலீடு, மாணவர்கள். முதலாளி, பெற்றோர்கள். அதனால மக்கள் குடியிருக்கிற இடங்கள்ல  கூட்டம் போட்டேன். கூட்டத்தில் சுற்றுப்புறச் சுகாதாரம்பற்றிப் பேசினேன். பொது இடங்களில், பள்ளியைச் சுற்றி, நடைபாதைகளில் அசுத்தம் செய்யக் கூடாதுனு சொன்னேன். முழு சுகாதாரம் உள்ள கிராமங்களுக்கு அரசாங்கம் மூணு லட்ச ரூபாய் பரிசு தரும் திட்டத்தைப் பத்திச் சொன்னேன். அதை நம்ம கிராமம் ஜெயிக்கணும்னு சொன்னேன். பத்து இளைஞர்களை என் துணைக்கு அழைச்சுக்கிட்டேன். அதிகாலை நாலு மணிக்கு தட்டு, கம்பு, டார்ச்லைட் எல்லாம் எடுத்துக்கிட்டுக் கிளம்பிடுவோம். வீதிகளில் வெளிச்சம் அடிச்சு நடந்து சத்தம் போட்டுக்கிட்டே போவோம். பதினஞ்சு நாள் அப்படி ரோந்து போனதில், அசுத்தம் பண்றது குறைஞ்சது. ஆனா, நிரந்தரத் தீர்வு கழிப்பறை வசதிதானே. கழிப்பறை வசதிக்காக தமிழ்நாடு அரசு, வீடு ஒன்றுக்குக் கொடுக்கும் மானியத்தொகை 2,000 ரூபாயை வெச்சு 36 வீடுகளுக்குக் கழிப்பிட வசதி செய்துகொடுத்தேன். முழு சுகாதாரத்துக்கான மூன்று லட்ச ரூபாயை ஜெயிச்சது நெடுவாசல். அந்தப் பணத்தில் பள்ளிக்குத் தேவையான பொருட்கள், ஒரு சின்னப் பாலம், சாலை வசதிகளைச் செய்தோம்.

அப்புறம் அந்தச் சமூக மக்கள் என்னை முழுசா நம்பினாங்க. கிராம சபாக் கூட்டங்கள் மூலமா, முதியோர் உதவித்தொகை, சாலை வசதி, வீட்டு வசதி, குளம் தூர்வாருதல்னு அரசாங்கத்தின் திட்டங் களைக் கிராமத்தில் செயல்படுத் தினோம். 'திரும்பும் திசை எங்கும் கணினியே’ பாடம் எடுக்க, எங்கள் பள்ளியில் கணினி வசதி இல்லை. கல்விக் கொடையாளர்கள் நிதி, அரசு நிதி எனக் கணினிகள், எல்.சி.டி. பிரின்டர்கள், ஸ்கேனர், இன்டர்நெட்னு எல்லா வசதிகளை யும் ஏற்படுத்தினோம். இன்னைக்கு என் மாணவர்கள் 10 பேர் பிளாக் கரா இருக்காங்க. அன்னைக்கு என்ன படிச்சாலும், உடனே அதை அப்லோட் பண்ணிருவாங்க.

தலைமைக் குணம் என்பது சொல்லிக் கொடுப்பதால் மட்டுமே வந்துவிடாது. அனுபவபூர்வமா அதை ஒவ்வொருவரும் உணரவைக்கணும். பசங்களை மைக்கில் பேசவைப்பேன். அது மேடை பயத்தைப் போக்கும். புவி வெப்பம் அடைவதைத் தடுக்க 12,010 மரக்கன்றுகள் நட்டோம். ஒவ்வொரு மரக்கன்றுக் கும் ஒரு மாணவன் பொறுப்பு. நட்டு, நீர் பாய்ச்சி கண்ணுங்கருத்துமாப் பார்த்துக்கிட்டாங்க. ஒரு இலை உதிர்ந்தால்கூட என்ன ஆச்சுனு பார்ப்பான். அறிவியல் ஆர்வம், உற்று நோக்கும் திறன் வளர்ந்தது. மரம் வெட்டுதல் கூடாதுனு பாடமா மட்டுமே சொல்லிக்கொடுத்தா, அதன் அர்த்தமே அவனுக்குப் புரிஞ்சிருக்காது. ஆனா, ஒரு மரத்தை வளர்க்கிறவன் எப்பவும் ஒரு மரத்தை வெட்ட மாட்டான். ஆக்கினவனுக்கு அழிக்க மனம் வராது.

மாணவர்களுக்கு மருத்துவ முகாம் நடத்தியபோது, பலருக்கு ஹீமோகுளோபின் அளவு குறைவா இருந்தது தெரியவந்தது.  நவதானியம் கலந்த பாலை மாணவர்களுக்குக் கொடுத்தேன். அதன் பிறகு செய்த மருத்துவப் பரிசோதனையில் அவர்களுடைய ஹீமோகுளோபின் அளவு அதிகரித்து இருந்தது. பெற்றோர்களும் புரிந்துகொண்டு வீட்டிலேயே பிள்ளைகளுக்கு நவதானியங்கள் கொடுக்கத் துவங்கினார்கள். மாணவனோ, பெற்றோரோ எதையும் சொல்லிட்டே இருக்காமல், செஞ்சு காமிச்சா உடனே புரிஞ்சுக்குவாங்க. 2010 ஆண்டு விழாவில், எனக்கு அந்தச் சமூக மக்கள் நாகஸ்வரம், மேளம் வாசிச்சுட்டு வந்து, 100 தட்டு, சைக்கிள், ஃபேன், பால், சமையல் பாத்திரங்கள் எல்லாம் அடுக்கி 'கல்விச் சீர்’ கொடுத்தாங்க. நெகிழ்ந்துட்டேன்!

இங்கே படிப்பு வராத மாணவன்னு யாருமே இல்லை. ஒரு ஆசிரியருக்கு விவரம் தெரியாம இருந்தால், அவருடைய மாணவர்களுக்கும் எதுவும் தெரியாது. கற்பிக்கும் முறை மூலமா எந்த மாணவனையும் வல்லவனா, நல்லவனா மாத்தலாம். அதைத்தான் நான் பண்றேன்.

முன்னாடி மாதா, பிதா, குரு, தெய்வம்னு இருந்தது. ஆனா, இப்ப மாதா, பிதா, கூகுள், தெய்வம்கிற அளவுக்கு டெக்னாலஜி வளர்ந்திருச்சு. அதனால், ஆசிரியர்கள் தங்களுக்குத் தெரிந்ததை மட்டும் சொல்லிக்கொடுக்காமல், நவீன மாற்றங்களையும் மாணவர்களுக்குச் சொல்லிக்கொடுக்கணும். அதுக்கு அரசாங்கம் எல்லா வசதிகளும் தந்திருக்கு. அதை மாணவர்களுக்கு வாங்கித் தரும் பொறுப்பு மட்டுமே நம்முடையதுனு ஒவ்வோர் ஆசிரியரும் உணர்ந்தாலே, அடுத்த தலைமுறை கம்பீரமாக நிமிரும்!''

- க.அபிநயா
படங்கள்: செ.சிவபாலன்

(ஆனந்த விகடன் இதழில் இருந்து.)

Sunday, March 10, 2013

யாராவது ஒரு நாள் முழுவதும் கடலை பார்த்தபடியே இருந்திருக்கிறார்களா என்ன ?

திரை பார்த்தல்

ஒரு நாளைக்கு சராசரியாக எட்டு முதல் பத்து மணி நேரம் கம்ப்யூட்டர் முன்னால் உட்கார்ந்திருக்கிறேன். உலகில் வேறு எந்த பொருளையும் இவ்வளவு நேரம் நான் பார்த்து கொண்டிருந்ததேயில்லை. திரையை பார்த்து கொண்டும் படித்தும் கொண்டு இருப்பது அலுப்பதேயில்லை. என்ன வசீகரமது?

யாராவது ஒரு நாள் முழுவதும் கடலை பார்த்தபடியே இருந்திருக்கிறார்களா என்ன ? அல்லது ஒரு மலையை எட்டு மணி நேரம் இடைவிடாமல் பார்த்து கொண்டேயிருக்க முடிகிறதா, கொட்டும் மழையை கூட பத்து நிமிசங்களுக்கு மேல் ஆர்வமாக யாரும் பார்ப்பதேயில்லை. உலகின் பேரழகான அதிசயங்கள், பூக்களின் பள்ளத்தாக்குகள், பசுமைவெளிகள் கூட ஐந்து நிமிசத்தில் அலுத்து போய்விடுகிறது. குழந்தைகளை கூட இன்று எவரும் இப்படி உற்று பார்த்து கொண்டேயிருந்ததேயில்லை. பின் எப்படி கணிணி மட்டும் இப்படி ஈர்க்கிறது.

ஒரு செல்போன் விளம்பரம் ஒன்றில் காதில் போனை வைத்தபடியே நாளெல்லாம் பேசிப்பேசி தலை ஒருச்சாய்ந்து போன மனிதனை காட்டுவார்கள். அவன் எங்கே போனாலும் தலையை சாய்த்துக் கொண்டே பேசுவான். கணிணி முன் நாள் எல்லாம் இருப்பவர்கள் கிட்டதட்ட அப்படித் தானிருக்கிறோம்.

சில வேளைகளில் இந்த கணிணித் திரை ஒரு மாபெரும் கடற்கரை என்று தோன்றும். யார் யாரோ எதற்காகவே கடந்து போகிறார்கள். அமர்ந்திருக்கிறார்கள். பேசிக் கொள்கிறார்கள். ரகசியமாக திட்டமிடுகிறார்கள். சண்டையிடுகிறார்கள். குற்றம் புரிகிறார்கள். தியானம் செய்கிறார்கள். அன்பை பகிர்ந்து கொள்கிறார்கள். உடற்பயிற்சி செய்கிறார்கள். அத்தனையும் ஒரே இடத்தில் சாத்தியமாகிறது.

சில வேளைகளில் இந்தத் திரை ஆசைகளின் ம்யூசியம் ஒன்றிற்குள் நுழைந்துவிட்டதை போல இருக்கிறது. ஒவ்வொருவருக்கும் தனித்துவமான ஆசைகள். கனவுகள், ரகசியங்கள், அதை அவரவர் அறைகளில் பகிர்ந்து கொள்கிறார்கள். ஒளித்து வைத்து கண்டுபிடிக்க சொல்கிறார்கள். உலகின் ஆசைகள் ஒட்டுமொத்தமாக கணிணி வழியாகவே ஒருங்கிணைக்கபடுகின்றன. காட்சிபடுத்தபடுகின்றன.

சில நேரம் கணிணியின் திரை அழகான பெண்ணை பின்தொடர்வதை போல நம்மை மீறிய ஈர்ப்பில் அழைத்துச் சென்று கொண்டேயிருக்கிறது. பின்னால் போவதன் மயக்கமே நம்மை கூட்டிப்போகிறது.

அரிதான வேளைகளில் அறியாத அடர்ந்த கானகம் ஒன்றினுள் செல்வதை போல பயம், வசீகரம் குழப்பம் திரும்பி போக முடியாதோ என்ற உள்ளுணர்வு, அதை தாண்டி காணும் வியப்பு, அறியாத மனிதர்கள், மிருகங்கள், பறவைகள், என்று வேறு உலகம் திறந்து கொள்கிறது.

கொலம்பஸ் நாடுகளை தேடி கடலில் அலைந்து திரிந்த பயணத்தை விடவும் கம்ப்யூட்டர் முன் அமர்ந்தபடியே உலகை தேடும் பயணம் பெரியது தானோ.

ஆனாலும் திரையை பார்த்து கொண்டிருப்பது புறஉலகை விட்டு நம்மை துண்டிக்கிறது. தனிமைப்படுத்துகிறது. உதடுகளை இறுக்கிபூட்டிவிடுகிறது. தனக்கு தானே பேசிக் கொள்ளும் மனிதனை போலாக்கி வைத்திருக்கிறது.

ஏன் கணிணி திரை மட்டும் இவ்வளவு வசீகரமாக இருக்கிறது. சினிமா தியேட்டரில் அடுத்தடுத்து இரண்டு காட்சிகளுக்கு மேல் பார்க்க முடிந்ததில்லை. காதலிக்கும் பெண்ணின் முகத்தை கூட ஒருவன் இவ்வளவு ஆசையாக அருகாமையில் நெருக்கமாக பார்த்து கொண்டேயிருப்பானா என்று சந்தேகமாகவே இருக்கிறது.

திரை பார்த்தல் என்ற இந்த கணிணி செயல்பாடு ஒரு தொற்றுபோய்போல உடனே பரவிவிடுகிறது. மீள்வது எளிதானதேயில்லை.

திரை மெல்ல நம் உடலின் செயல்பாட்டினை ஒடுக்கத் துவங்குகிறது. உடலை விட மனதே நம்மை இயக்குகிறது என்று நம்ப வைக்கிறது. ஒரே நாற்காலி எதிரே கணிணியின் திரை. அது பேசுகிறது. பாடுகிறது. மௌனமாகிறது. பேசவைக்கிறது. கோபபட வைக்கிறது. காதலிக்க செய்கிறது. திறமையை வெளிப்பட செய்கிறது. பசி மறந்து தாகம் மறந்து இடையிடையே அழைக்கும் தொலைபேசி குரல்களை மட்டுமே அனுமதித்து அது நம்மை முற்றாக கவ்விக் கொண்டிருக்கிறது. யோசிக்கையில் உலகில் வேறு எந்த பழக்கமும் இவ்வளவு தீவிரமாக மனிதனை பற்றிக் கொண்டதில்லை.

சிறுவயதில் விளையாட்டுவீரர்கள் பந்தோடு நடந்து போவதையும், பந்தை அருகாமையில் வைத்து கொண்டு உறங்குவதையும் பார்த்திருக்கிறேன். அப்போது வேடிக்கையாக இருக்கும் அவர்கள் பந்தோடு பேசுவார்கள். பந்தை கோவித்து கொள்வார்கள். அந்த மனநிலையை விட முற்றிய மனநிலை கணிணி திரை உருவாக்குகிறது.

கம்ப்யூட்டர் முன்னால் அமர்ந்து அழுபவர்களை கண்டிருக்கிறேன். லேப்டாப்பிற்கு பிறந்தநாள் கொண்டாடும் இளைஞர்கள் இருக்கிறார்கள். வயதை மறந்து கணிணி அனைவரையும் கட்டிப் போட்டு வைத்திருக்கிறது. ஒரு மாபெரும் தியான மண்டபத்தில் அமர்ந்திருப்பதை போல யாவரும் அவரவர் கணிணி முன்பாக அமர்ந்திருக்கிறார்கள். எதையோ தேடிக் கொண்டும் பகிர்ந்து கொண்டுமிருக்கிறார்கள். அல்லது மாபெரும் சந்தை கூடம் ஒன்றினுள் நுழைந்துவிட்டதை போன்றுமிருக்கிறது.

நம் காலத்தின் மாபெரும் ஒற்றை செயல் கம்ப்யூட்டர் முன் அமர்ந்திருப்பது தானோ.

புத்தகங்கள் இப்படி வசீகரமானதில்லை. அது ஒவ்வொருவரையும் ஒருவிதமாகவே அணுகுகிறது. நெருக்கம் கொள்கிறது. இசை வசீகரமானது தான் ஆனால் அதன் முன்னே யாவரும் ஒன்று போல ரசனை கொள்வதில்லை. வேறு எந்த கலைகள் விஞ்ஞான உபகரணத்தை விட கணிணியின் திரை வசீகரமாக இருக்கிறது. இறுக்கமாக பிடித்து வைத்துக் கொள்கிறது.

தினமும் கம்ப்யூட்டரில் நான் என்ன பார்க்கிறேன் என்ன செய்கிறேன் என்று ஒரு குறிப்பேட்டினை எழுதலாம் என்று முயற்சித்தேன். ஒரு மாத காலத்தில் அது ஒரு மாபெரும் நாவல் அளவு வளர்ந்துவிட்டது. பயமாக இருந்தது. சட்டென சில நாட்கள் கணிணி பக்கமே போக கூடாது என்று அதை அணைத்தே வைத்திருந்தேன். பழையபடி பேனா காகிதங்கள், நோட்டுகள் என்று திரும்பினேன். ஆனால் ஏதோ உடல்நலமற்று போய் நோயாளியான ஒருவன் இவ்வளவு தான் தன்னால் முடியும் என்று உணர்ந்ததை போல மனது மிகவும் சோர்வு கொண்டதோடு என்றோ கைவிட்ட பழக்கத்தை மறுபடி செய்து பார்ப்பதை போலவும் உணர செய்தது.

சினிமாவில் எழுவதால் இன்றும் பேடு பேப்பர் பேனா என்ற பழக்கமிருக்கிறது. இல்லாவிட்டால் அது என்னைவிட்டு பேனாவில் எழுதுவது முழுமையாக போயிருக்கும். ஆனால் பேனாவில் எழுதும் போது ஏதோ சிறுவயது செயலை செய்வது போலதான் தோன்றுகிறது. எடிட் செய்யவும் கதை சொல்வதன் பல்வேறு சாத்தியங்களை உருவாக்கி பார்க்கவும் முடிவதில்லை.

கம்ப்யூட்டர் கேம்ஸ் எனும் மாய விளையாட்டை நாள் எல்லாம் விளையாடிக் கொண்டிருப்பவர்களை அறிவேன். அவர்கள் திரையை வென்றுவிட தனது அத்தனை சாத்தியங்களையும் பயன்படுத்துகிறார்கள். தோற்றுபோகையில் வருத்தம் கொள்கிறார்கள். வெற்றி காண்கையில் கொண்டாடுகிறார்கள். வெளிஉலகின் பிரம்மாண்டம். வசீகரம், பிரச்சனைகள், சந்தோஷங்கள் என எதுவும் இன்று முக்கியமாகயில்லை.. நமது அடையாளங்கள் இல்லாமல் நாம் உலவவும் அறிந்து கொள்ளவும் கணிணி மட்டுமே அனுமதிப்பது தான் இதன் காரணமா?

கணிணி திரை உருவாக்கும் முக்கிய பிரச்சனையாக உட்கார்ந்தே இருப்பது என்ற பழக்கத்தையே சொல்வேன். அது கணிணி திரை இல்லாவிட்டாலும் நம் கால்களை கட்டிபோட்டுவிடும் அபாயத்தை உருவாக்க கூடியது. வெளியில் நடப்பதற்கோ, ஒடுவதற்கோ. உலகை சுற்றி அலைவதற்கோ நமது கால்கள் தயங்குகின்றன. எங்கே பயணம் செய்தாலும் அது ஒய்வை நோக்கியதாகவே இருக்கிறது. அடுத்த வீதியில் உள்ள ஒன்றை பற்றி அறிந்து கொள்வதற்கு கூட உடல் விரும்புவதில்லை. கூகிள் தேவைப்படுகிறது. உலகை நாம் சுருக்கி கொண்டே வந்து வெறும் தகவல்களாக மாற்றிக் கொண்டிருக்கிறோமா? அல்லது காட்சி பிம்பங்களாக மட்டுமே உலகம் போதுமானதாக இருக்கிறதா?

ஆரம்ப காலத்தில் கணிணியை அது ஒரு ஜன்னல் அது நம் வீட்டிற்குள் இருக்கிறது. விரும்பும் போது திறந்து வேறு உலகை பார்த்து கொள்கிறோம் என்று தான் பலரும் நினைத்தார்கள் இன்று அந்த மனநிலை அப்படியே மாறியிருக்கிறது.

இன்று கணிணி தான் வீடு. உலகம். அதிலிருந்து வெளியே போக சிறிய கதவு இருக்கிறது. அக்கதவு எப்போதாவது திறந்து கொள்ளும்போது உடன்வாழும் மனிதர்களையும் சொந்த தேவைகளையும் பார்த்து கொள்கிறோம்

கணிணி பலரது வீடுகளிலும் அணைக்கபடுவதேயில்லை. அது பகலிரவாக ஒடிக்கொண்டேயிருக்கிறது. நமது உறக்கமும், உடலின் தேவைகளும் மட்டுமே கணிணியை விட்டு நம்மை துண்டித்திருக்கிறது. அதற்கும் மாற்று உருவாகினால் இருப்பின் ஆதாரங்கள் சிதறடிக்கபட கூடும். அதுதான் பயமாக இருக்கிறது.

நன்றி :எழுத்தாளர் இராமகிருஷ்ணன்

ஆயகலைகள் 64

உலகில் தீவிரவாதம் அதிகரிக்க யார் காரணம் ?

உலகில் தீவிரவாதம் அதிகரிக்க யார் காரணம் ?

இன்றய கால கடத்தில் ஒவொறு நாடும் தங்களது நாட்டின் பாதுகாப்பு மற்றும் மின் தேவைக்காக யுரோனியத்தை செறிவூட்டும் நடவடிக்கையில் இறங்கி உள்ளன. இதில் எந்த நாட்டையும் நாம் குறை கூற முடியாது. அப்படி குறை கூறுவதாக இருந்தால் இந்தியாவும் அமெரிக்க எதிர்ப்பையும் மீறி அனு சோதனை நடதியது. அமெரிக்காவும் அமெரிக்கவின் அல்லக்கை நாடுகலும் பொருளாதார தடை வித்திதது. 

அனு உலை வேண்டுமா வேண்டாமா என்பதில் நமக்கு இருவேறு கருத்துகள் இருந்தாலும் நாம் இந்தியா அனு சோதனை நடத்தியதை தவறு என்று சொல்ல முடியாது. அது நமது நாட்டின் பாதுகாப்பு பிரச்சினை என்பதால் நாம் அதை ஆதரித்துதான் ஆகவேண்டும். நமது நாட்டை சுற்றி இருக்கும் சீனா பாகிஸ்தான் போன்ற நாடுகளுக்கு நமது பலத்தை காட்டி அவர்களுக்கு ஒரு அச்சைதை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகதான் அனு சோதனை நடத்டினோம் என்பதை மறுக்க முடியாது. நம் மீது பொருளாதர தடை வித்தித அமெரிக்க மற்றும் அதன் அல்லக்கை நாடுகலும் அனு ஆயுததை தயாரித்து வைத்துக்கொண்டும் யுரோனியத்தை செறிவூட்டும் பனியில் ஈடுபடுக்கொண்டே தான் நம் மீது பொருளாதார தடை விதித்தன.

இப்பொழுது ஈரான் யுரோனியத்தை செறிவூட்டுவதை அமேரிக்கா எதிர்கின்றது. ஈரான் அனு ஆயுத சோதனை நடத்துவது அந்த நாட்டின் உரிமை அதை சோதனை நடத்த கூடாதென்று சொல்ல அமெரிகாவுக்கு என்ன உரிமை இருகின்றது. ஈரான் அனு சோதனை நடதியது அனு ஆயுதம் தயாரிப்பதற்காக அல்ல மின்சாரம் தயாரிக்கதான் என்று தன்னிலை விளக்கம் அளித்துள்ளது. அந்த நாடு மின்சாரம் தயாரிதால் என்ன அனு ஆயுதம் தயாரித்தால் என்ன அது அந்த நாட்டின் உரிமை. அனு ஆயுதத்தை குவித்து வைத்திருக்கும் அமேரிக்கா அனுவை செரிவூட்டுவதை கண்டிக்க என்ன அருகதை இருக்கின்றது. ஈரான் அனுவை செரிவூட்டுகின்றதென்றால் அதன் அண்டை நாடான இஸ்ரேல் அனு ஆயுதம் வைத்துள்ளது

ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் பிரச்சினை இருந்து வருவது உலகரிந்த விசயம் அப்படி இருக்கும் பொழுது தனது எதிரி நாடு பலமான ஆயுதம் வைத்திருக்கும் பொழுது ஈரானும் தனுது ரானுவத்தை பலபடுத்த வேண்டியது இன்றியமையாதது. அப்படி இருக்கும் பொழுது அமெரிக்கா எப்படி ஒரு நாட்டை அனு ஆயுதம் தயாரிக்க கூடாது என்று கூறிக்கொண்டு மற்றொரு நாட்டை அனு ஆயுதம் தயாரிக்க அனுமதிப்பது எந்த விதத்தில் நியாயமாக இருக்க முடியும்.

இப்படிதான் ஈராக்கும் பயங்கரமான ஆயுதம் வைத்திருகின்றது என்று கூறி அதன் மீது போர் தொடுத்தது. ஈராக் அயுதம் வைத்திருப்பது பெரிய குற்றமா அப்படி பார்த்தால் உலகில் உள்ள ஆயுதத்தில் எழுபது சதவிகிதம் வைத்திருக்கும் அமெரிக்கவுக்கு என்ன தண்டனை கொடுப்பது. சரி ஈராக் ஆயுதம் வைத்தைருந்தது என்ற காரனத்தை கூறித்தானே போர் தொடுத்தது. அப்படி என்ன ஆயுதத்தை ஈராக்கில் கண்டு பிடித்தது. லட்ச்சக் கனக்கான மக்களை கொன்று குவித்ததை தவிர அங்கு என்ன ஆயுத்ததை கண்டு பிடித்தது. எத்தைனை மக்கள் கை கால்களை இழந்து ஊனமானார்கள் இதற்கு அமெரிக்கா என்ன பதில் சொல்லப் போகின்றது. இபொழுத்து என்னவென்றால் ஈரான் அனு ஆயுதம் வைத்திப்பதாக கூறிக்கொண்டு அந்த நாட்டின் அருகாமையில் தனது அனு ஆயுத போர்கப்பலை நிறுத்தியுள்ளது.

ஈரான் மீது போர்தொடுத்தால் அதனால் பாதிக்க போவது அப்பாவி மக்கள்தான். இப்படி ஒரு நாட்டின் மீது அனியாயமாக போர் தொடுத்தால் அதனால் பாதிக்கபட்ட மக்கள் சொந்த பந்தங்களை இழந்த மக்கள் தங்களின் எதிரிப்பை காட்ட ஆயுதத்தை தான் கையிலெடுப்பார்கள். பலம் வாய்ந்த அமெரிக்காவை நேரடியாயக தாகமுடியாதென்பதால் பொது இடத்தில் குண்டு வைக்கதான் செய்வார்கள் போரால் பாதிக்க பட்ட மக்களின் உனர்வுகளை புரிந்து கொள்ள வேண்டுமென்றால் போரின் பாதிப்பை அனுபவித்தால் தான் புரிந்து கொள்ள முடியும். அது தான் ஈராக்கில் நடந்து கொண்டு இருக்கின்றது. தீவிரவாதிகள் தானாக முலைப்பதிலை. ஒரு நாட்டின் மீதோ அல்லது ஒரு இனத்தின் மீதோ அனியாயமாக தாக்குதல் நடத்துவதன் மூலம் தீவிரவாதத்தை விதைக்கின்றனர். (அதற்காக ஆயுதத்தை கையிலெடுத்து அப்பாவி மக்களை கொல்வதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. இங்கு நான் சொல்ல வருவது அமெரிக்கா போன்ற நாடுகள் விதைத்த திவிரவாதம் என்னும் உயிர் கொல்லி இன்று நம் கலுத்திற்கு மேல் கத்தியாக தொங்கிகொண்டு இருக்கின்றது.)

தீவிரவாதத்தை உருவாக்குவதில் அமெரிகாவிற்குதான் முதல் இடம். இந்த லட்ச்சனதில் தீவிரவாததை ஒடுக்குவத்துதான் அமெரிக்க அரசின் குறிக்கோளாம் ஒபாமா வாய் கூசாம் கூறிக்கொண்டு இருக்கின்றார். இங்கு இன்னொரு விசயத்தை கவனிக்க வேண்டி இருக்கின்றது. இந்தியாவும் பாகிஸ்தானும் அனு ஆயுத சோதனை நடத்தும் பொழுது அமெரிக்கா இப்படி போர் தொடுக்கவில்லை.ஆனால் ஈரான் மீது மட்டும் போர் தொடுக்க வரிந்து கட்டிக்கொண்டு தயாராவது அனு ஆயுதம் தயாரிப்பதை எதிர்பதற்க்காக அல்ல. அந்த நாட்டின் என்னை வளத்தை கைபற்ற தான் என்பது தெளிவாக தெரிகின்றது. இந்தியா இறக்குமதி செய்யும் பெட்ரோலில் அருபது சதவிகிதம் ஈரானில் இருந்துதான் இறக்குமதி செய்கின்றது. அமெரிக்கா ஈரான் மீது போர் தொடுக்குமேயானால் இந்தியாவை பெட்ரோல் தட்டுபாடு ஏற்படும் அதானால் நமது மக்கள் நேரடியாகவே பாதிக்க படுவார்கள். இப்படி அனியாயம் செய்யும் இந்த அமெரிக்க புனைக்கு மனி கட்டுபவர் யார்?

இந்த நேரத்தில் நாம் மற்றொரு விசையத்தையும் உற்று நோக்க வேண்டி உள்ளது. ஈரான் அணு சோதனை நடத்திய இந்த நேரத்தில் அனைத்து நாடுகளின் பார்வையும் ஈரான் பக்கம் திரும்பி உள்ளது என்பதை அனைவருக்கும் தெரியும் அது ஈரானுக்கும் தெரியாமல் இல்லை. இந்த சூழலில் இருக்கும் எந்த ஒரு நாடும் மற்ற நாட்டை பகைத்து கொள்ள விரும்பாது. அப்படி இருக்கு பொழுது ஈரான் எப்படி இஸ்ரேல் தூதரக அதிகாரிகள் மேல் இந்தியாவிலும் தாய்லாந்திலும் தாக்குதல் நடத்துவார்கள். இந்தியா அரசு ஈரான் மீது போர்தொடுக்க ஆதரவு தரமாட்டார்கள் என்பதை அறிந்த அமேரிக்கா மற்றும் இஸ்ரேல் உளவுத்துறையின் வேலைதான் இந்த இஸ்ரேல் அதிகாரிகள் மேல் தாக்குதலுக்கு காரணமாக இருக்க வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளது.

ஆனால் வழக்கம் போல இந்திய ஊடகங்கள் "இஸ்ரேல் தூதரக அதிகாரிகள் மேல் ஈரான் தீவிர வாதிகள் தாக்குதல்" என்று செய்தி வெளியிடுகின்றன. உலக அலவில் இன்று நடத்த படும் பெரும்பாலான தாக்குதலுக்கு பின்னால் இப்படிப்பட்ட உளவுத்துறையின் பங்கு இல்லாமல் இல்லை, ஆனால் ஒவொரு சம்பவத்திற்கும் ஏதாவது ஒரு அப்பாவி மேல் வழக்கை போட்டு அவர்களின் வாழ்கையை வீணாக்கும் நடவடிக் கைகளில் அனைத்து நாட்டு காவல் துறை ஈடுபடுவதையும் மறுக்க முடியாது. இப்பொழுது சொல்லுங்க யார் திவிரவாதி அப்பாவி மக்களை அனியாயமாக கொன்று குவிக்கும் அமெரிக்காவா அல்லது இழந்த உரிமயை மீட்க்க போராடும் அப்பாவி மக்களா?


நன்றி:இனி ஒரு விதி செய்வோம்

உடல் எடையைப் பராமரிக்க உதவும் தக்காளி..!


தக்காளியை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை அதிகரிக்காமல் இருக்கும் என்று அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

தக்காளியில் அதிக அளவு வைட்டமின் சி உள்ளது. அதனை தொடர்ந்து சாப்பிடுவது இதயத்துக்கு நல்லது. உடலில் கொழுப்பு சேராமல் பாதுகாக்க உதவும் என்பதெல்லாம் ஏற்கெனவே அனைவருக்கும் தெரிந்த விஷயம்.

தற்போது தக்காளியை தினமும் உணவில் சேர்த்துக் கொள்வதால் உடல் எடை அதிகரிக்காமல் ஒரே அளவில் பராமரிக்க முடியும் என்று பிரிட்டன் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

பசியைத் துண்டும் ஹார்மோன்களின் செயல்பாடுகளை தக்காளி கட்டுப்படுத்துகிறது. இதனால் அதிக அளவு சாப்பிடுவது தடுக்கப்பட்டு உடல் எடை அதிகரிக்காமல் கட்டுக்குள் இருக்கிறது.

சராசரி எடை கொண்ட 18 வயது முதல் 35 வயதுக்குள்பட்ட பெண்கள் இதற்கான ஆய்வில் ஈடுபடுத்தப்பட்டனர். அவர்களில் ஒரு பிரிவினருக்கு சான்ட்விச்களுடன் தக்காளி வழங்கப்பட்டது. மற்றொரு பிரிவினருக்கு சான்டவிச்சுடன் கேரட் வழங்கப்பட்டது. இதில் தக்காளி சாப்பிட்டு வந்தவர்கள் குறைவாகவே உணவு சாப்பிட்டனர்.

இது குறித்து ஆய்வாளர் டாக்டர் ஜூலி லவ்குரோவ் கூறுகையில், “இது சிறிய அளவில் நடத்தப்பட்ட ஆய்வுதான் என்றாலும் முடிவு திருப்திகரமானதாக உள்ளது. தக்காளி சாப்பிடுவது பசி உணர்வைக் கட்டுப்பாட்டுக்குள் வைக்கிறது என்பது முதல்கட்டமாக தெரியவந்துள்ளது. இது தொடர்பாக தொடர்ந்து ஆய்வு நடத்தவுள்ளோம்’ என்றார்.
நன்றி:இனி ஒரு விதி செய்வோம்

பெப்சி, கோககோலா-அப்படி என்ன நச்சு பொருள் கலந்துள்ளது?

பெப்சி, கோககோலா-அப்படி என்ன நச்சு பொருள் கலந்துள்ளது? 

பெப்சி, கோககோலா உள்ளிட்ட பானங்களில் நச்சுப்படிவங்கள் உள்ளன என்ற குற்றச்சாட்டு பரவலாக ஆரம்பம் முதல் இருந்து வருகிறது. இன்றைய நுகர்வுக் கலாசாரத்தில் இந்தக் குளிர்பானங்கள் சமூக அந்தஸ்த்தின் குறியீடாகவும் மாற்றியமைக்கப்பட்டு புதிய கலாசாரமயமாக்கத்துக்கும் வித்திட்டுள்ளது.

ஆனால் இந்தப் பானங்களால் ஏற்படக் கூடிய விளைவுகளை சுட்டிக்காட்டும் போது பலரும் ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டனர்.
பெப்சி, கோககோலா மட்டுமல்ல தம்ஸ் ஆப், செவன் அப், மிரிண்டா, ·பேண்டா, லிம்கா என இந்தப் பானங்களின் வரிசை மிகவும் நீளமானது.

இந்த நீண்ட வரிசையைப் போலவே இவற்றால் ஏற்படக்கூடிய தீங்குகளும் நீளமானது. ஆனால் இந்தப் பாதிப்புகள் நமக்குத் தெரிவதில்லை. அந்தளவிற்கு இவை மீதான தாக்கம் ஆர்வம் திட்டமிட்டு பரப்பப்பட்டுள்ளது. குறிப்பாக தொடர்பூடகங்கள் இந்தப் பானங்களின் நுகர்வுக் கலாசாரமயமாக்கலின் முதன்மையான இடம் வகிக்கின்றது.

செயற்கையாகத் தயாரிக்கப்பட்ட இரசாயன அமிலங்களே இம்மென்பானங்களில் புதுத்துணர்வு தரும் சுவையூட்டிகளாக சேர்க்கப்படுகின்றன. இனிப்புச் சுவையை நிலைப்படுத்துவதிலும் இந்த அமிலங்கள் பயன்படுகின்றன.

பொதுவாக மென்பானங்களில் சிட்ரிக் அமிலம் பாஸ்பரிக் அமிலம் சில சமயங்களில் மாலிக் அல்லது தாத்தாளிக் அமிலங்கள்கூட சேர்க்கப்படுகின்றன. இந்த செயற்கை அமிலங்கள் எல்லாமே உடலைப் பாதிக்கக்கூடிய தன்மை வாய்ந்தவை.

இந்த அமிலங்கள் பற்களில் பாதுகாப்புப் பூச்சான எனாமலை அரிக்கக்கூடிய தன்மையைக் கொண்டிருக்கின்றன. மென்பானங்கள் குடித்து ஒரு மணிநேரம் வரை இந்த அரிப்பு நீடிக்கலாம். (குடித்தவுடன் பற்கள் கூசுகின்ற சங்கதி இதுதான்) மெனபானங்களின் மூலம் உடலில் சேரும் பாஸ்பரிக் அமிலம் கடைசியில் சிறுநீருடன் வெளியேறும் போது தனியாக வெளியேறுவதில்லை.

எலும்புகளிலும் பற்களிலும் இருக்கும் கால்சியத்தையும் பெயர்த்துத் தன்னுடன் சேர்த்துக் கொண்டு போய்விடுகிறது. கால்சியம் போதாத நிலையில் எலும்புகள் பலம்குன்றி கடைசியில் முறியும் நிலைக்கு போய்விடுகின்றன.

மென்பானங்கள் எல்லாவற்றிலுமே சர்க்கரை சேர்க்கப்படுகின்றன. உதாரணத்துக்கு 325 மில்லிலிட்டர் பெப்சியில் ஐந்தரை தேக்கரண்டி சர்க்கரை சேர்க்கப்படுகிறது. உலக சுகாதார நிறுவனம் (WHO) நாள் ஒன்றுக்கு ஒருவர் உட்கொள்ள வேண்டிய சர்க்கரையில் அளவு 8 தொடங்கி 11 தேக்கரண்டி அளவு என நிர்ணயம் செய்து வைத்திருக்கிறது.

ஒரு நாளில் நாம் அருந்தும் பால், தேநீர் மூலம் நமது உடலில் சேரும் சர்க்கரையின் அளவுடன் மென்பானங்களோடு சேர்ந்து வரும் சர்க்கரையின் அளவையும் கணக்கிட்டால் நிர்ணயித்த அளவைவிட நாம் சாப்பிடும் சர்க்கரையின் அளவு பன்மடங்கு அதிகம் என்பது தெரியவரும்.

சர்க்கரை அதிக அளவு உடலில் சேருவதை, சர்க்கரை தானே என்று இனிப்பான செய்தியாக எடுத்துக் கொள்ள முடியாது. ஊட்டச்சத்து ஆய்வாளரான விஞ்ஞானி மேஜான் யாட்கின் சர்க்கரையை 'வெள்ளை நச்சு'' என்று வர்ணித்து இருக்கிறார்.

சர்க்கரையானது பற்களில் பாக்டீரியா கிருமிகள் பெருக வாய்ப்பு அளிப்பதுடன் இதயநோய், தோல்வியாதி போன்றவற்றையும் ஏற்படுத்தும் என நிரூபிக்கப்பட்டுள்ளது.

இயற்கைச் சர்க்கரையின் சேதாரம் இவ்வளவு என்றால் சிலவகை பானங்களில் சேர்க்கப்படும் செயற்கை சர்க்கரைகளும் தம்பங்குக்கு தொல்லைகளைத் தருகின்றன.

குறைந்த கலோரியைக் கொண்ட டயட் (diet) குளிர்பானங்களில் செயற்கை இனிப்பான அஸ்பாடேம் (Aspaetame) எசல்பேம் (aceslfame) சாக்ரின் (Saccharine) போன்றவை பயன்படுத்தப்படுகின்றன.

மிகப் பரவலாக பயன்படுத்தப்படும் அஸ்பாடேம் சர்க்கரையைவிட 200 மடங்கு அதிகான இனிப்பைக் கொண்டதாகும். இவை தலைவலி, ஞாபகமறதி, வயிற்றுபோக்கு, பார்வை மங்கல், குருடு போன்றவற்றை ஏற்படுத்துவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வாஷிங்டன் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஜான் ஒன்லி மிருகங்களின் மீது நடத்திய ஆய்வுகளில் இருந்து அஸ்பாடேம் மூளைப் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய வாய்ப்புகளை கொண்டிருப்பதாகக் குறிப்பிடுகிறார்.

காபி, தேநீர் போன்றவற்றில் கா·பின் cafein எனும் வேதிப்பொருள் இருப்பது பலரும் அறிந்த ஒன்று. ஆனால் கோககோலா பானத்தின் சுவையை அதிகரிப்பதற்காக கா·பின் பயன்படுத்துவது அதிகம். இது வெளியில் தெரியாத விஷயம். கா·பின் மத்திய நரம்புகளை மிகையாகத் தூண்டிவிடுகிறது. அதிகமான கா·பின் தூக்கமின்மை எரிச்சல், இதயத்துடிப்பு அதிகரிப்பு போன்றவற்றுக்கு வழிகோலிவிடுகிறது.

மென்பானங்களில் சேர்க்கப்பட்டிருக்கும் நிறமூட்டிகள் எவை என்பது பற்றி பாட்டில்களில் குறிப்பிடப்படுவதில்லை. ஆனால் பெரும்பாலான சாயங்கள் புற்றுநோய்க்கு காரணமாய் உள்ளன என்பதே உண்மை. தார்ட்ராசின் எனப்படும் ஆரஞ்சு நிற சாயம் தோலில் அரிப்பு எரிச்சல் போன்றவற்றை ஏற்படுத்துவதோடு புற்றுநோய்க்கும் காரணமாகத் திகழ்வதாகக் கருதி இச்சாயத்துக்கு நார்வேயில் தடை செய்யப்பட்டிருக்கிறது.

கார்மேசின் (carmoisine) எனப்படும் சிவப்பு வர்ணம் உணவை நஞ்சடையச் செய்வதுடன் புற்றுநோயையும் ஏற்படுத்தலாம் என்று அமெரிக்காவிலும் கனடாவிலும் தடை செய்யப்பட்டிருக்கிறது.

சிங்கப்பூர் தனது பத்து ஆண்டு சுகாதார இயக்கத்தின் ஓர் அங்கமாக கோககோலா, பெப்சி போன்றவற்றுடன் சர்க்கரை அதிகம் கொண்ட பல குளிர்பானங்களை 1972ல் இருந்து கல்வி நிறுவனங்களில் விற்பதற்கு தடை செய்திருக்கிறது.

சமீபத்தில்கூட பிரான்சில் கோககோலா குடித்த பலருக்கு காய்ச்சல், வாந்தி, தலைவலி ஏற்பட்டதால் பிரான்ஸ் தனது நாட்டில் கோககோலவின் விற்பனைக்கு தடை விதித்துள்ளது.

ஆக இந்திய அளவில் கோலா, பெப்சி போன்ற பானங்களுக்கு தடை விதிக்க எடுக்கும் முயற்சி ஒன்றும் புதுமை அல்ல. இவ்வளவு ஆபத்துகளையும் தன்னில் கரைத்துக் கொண்டு வரும் மென்பானங்களை இவ்வளவுநாள் அனுமதித்திருப்பது மோசமானது.

இந்த மென்பானங்கள் மீது தடைவிதித்தல் என்பதை பகிரங்கவிவாதப் பொருளாக்க வேண்டும். இவற்றால் விளையும் கேடுகள் பற்றி அறிவுபூர்வமான விழிப்புணர்வு வெகுசன மட்டத்தில் உருவாக்கப்பட வேண்டும்.

மேலும் உள்ளூர் வளங்களைக் கொண்டு தயாரிக்கும் உள்ளூர் மென்பானங்களில் உற்பத்தியை பெருக்க கொள்கை ரீதியான முடிவுக்கு அரசு முன்வர வேண்டும்.


நன்றி:இனி ஒரு விதி செய்வோம்