Thursday, June 2, 2011

சயனோ குளுக்கோசைடுகள்


ஹைட்ரஜன் சயனைடு’ என்பது ஒரு கொடிய நஞ்சாகும். பல தாவரங்கள் அந்த விஷத்தைப் பயன்படுத்தி, தம்மைத் தின்ன வரும் பூச்சிகளை விரட்டிவிடுவது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. அந்தத் தாவரங்களைப் பூச்சிகள் கடிக்கிறபோது செல்கள் சேதப்படுத்தப்படுகின்றன. அப்போது அத்தாவரங்கள், `சயனோ குளுக்கோசைடுகள்’ என்ற சேர்மங்களில் இருந்து சயனைடை உண்டாக்கி வெளிப்படுத்துகின்றன.

இந்தச் செயல்முறையில் தேவையானபோது மட்டும் சரியான தருணத்தில் நஞ்சு வெளியிடப்படுகிறது. இப்படி சுமார் ஆயிரம் வகையான தாவரங்கள் சயனைடு விஷத்தை வெளியிடுகின்றன. `காசாவா’ என்ற தாவரத்தில் சயனைடு விஷம் அதிகம். அதை உபயோகிப்பது ஆபத்தான விஷயம். யாரோ, பெரிய நாப்விட், வெள்ளை கிளாவர், பறவைக் கால் டிரபாயில் போன்ற தாவரங்கள் சயனைடை உற்பத்தி செய்வதில் குறிப்பிடத்தக்கவை.


பறவைக் கால் டிரபாயில், எப்படி நத்தைகளிடம் இருந்து தன்னைத் தற்காத்துக்கொள்கிறது என்று கண்டுபிடிக்க முயற்சித்து வருகிறார்கள். தாவரவியல் மற்றும் மரபியல் துறையைச் சேர்ந்த பேராசிரியர் ஜோன்ஸ், டாக்டர் ஸ்டீபன் காம்ப்டன் ஆகிய இரு ஆய்வாளர்கள் பூச்சிகளுக்கு சயனைடு இலைகளைத் தின்னக் கொடுத்துப் பரிசோதித்தார்கள். அதேபோல இருவகையான தாவரங்களின் பூவிதழ்களையும் தின்னக் கொடுத்தார்கள்.
 
சிலவகை வண்டுகள், நீல வண்ணத்துப்பூச்சியின் லார்வா புழு, ரம்ப ஈ போன்றவை சயனைடை பற்றி கவலைப்படாமல் அத்தகைய இலைகளைச் சாப்பிட்டு விடுகின்றன. சயனைடை தீங்கற்ற பொருளாக மாற்றிவிடக்கூடிய திறமை அவற்றுக்கு இருப்பதாகத் தோன்றுகிறது. மூன்று வகை வெட்டுக்கிளிகள், இரண்டு வகை வண்டுகள், இயர்விங் என்ற பூச்சி, இரண்டு வகை நத்தைகள் ஆகியவை சில குறிப்பிட்ட தாவரங்களை மட்டும் தேர்ந்தெடுத்து உண்கின்றன. அவை பறவைக் கால் டிரபாயிலை ஒதுக்கி விடுகின்றன. சயனைடு அதிக அளவில் இருக்கும்போது கொடிய நஞ்சு.


ஆனால் டிரபாயில் செடி, தன்னைத் தின்ன வரும் பூச்சிகளைக் கொல்ல முனைவதில்லை. ஒரு எச்சரிக்கை கொடுத்து விரட்டிவிடவே சயனைடை அது பயன்படுத்துகிறது. வெட்டுக்கிளி ஒன்று ஒரு பூவில் போய் உட்கார்ந்த போது நடந்ததை ஆய்வாளர்கள் விவரிக்கிறார்கள்.



அது தனது மீசைகளாலும், உணர்கொம்புகளாலும் பூவைப் பரிசீலித்துவிட்டு, சரி சாப்பிடலாமென்று ஒரு கடி கடித்தது. அப்போதுதான் பூவில் சயனைடு இருப்பதை அது உணர்ந்தது. உடனே சட்டென்று பின்வாங்கி தலையை ஆட்டியவாறு பூவை விட்டுப் போய்விட்டது.