Showing posts with label cooking. Show all posts
Showing posts with label cooking. Show all posts

Monday, August 29, 2011

உணவே மருந்து

நம் உடம்பிலுள்ள இரத்த நாளங்களில் கொழுப்பு படிந்து இருதய அடைப்பு ஏற்படுகிறது. இந்த இருதய அடைப்பு மாரடைப்புக்கு வழிவகுத்து இறுதியில் மரணத்தின் பிடியில் கொண்டு போய் சேர்த்துவிடும்.
இந்த இருதய அடைப்பை உடைக்க முடியாதா? நிச்சயம் முடியும்.

இயற்கை வழியில் செல்லும் எவரும் இருதய அடைப்பு என்ற அபாயத்திலிருந்து தப்பித்துவிடலாம்.

காரட்:



தினமும் காரட்டை அதிக அளவில் சேர்த்துக் கொண்டால் (பச்சையாக) இரத்தத்தின் கொலஸ்ட்ரால் அளவு குறைகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
முட்டைக்கோசு:
மாரடைப்பு நோய் வரும் வாய்ப்பினைக் குறைக்கிறது.


பீட்ரூட்:




ஃபோலிக் ஆசிட், இரும்புச் சத்து பீட்ரூட்டில் உள்ளதால் தொடர்ந்து உண்போர்க்கு இரத்தசோகை நோய் வருவதில்லை. இரத்தக் குழாய்களில் படியும் கொலஸ்ட்ராலைக் குறைக்கிறது.

இஞ்சி:



 கணுக்கள் சிறிதாக உள்ள இஞ்சியைத் தேர்ந்தெடுங்கள். இஞ்சி இரத்தக் குழாய்களில் ஏற்படும் இரத்த உறைவைத் தடுத்து மாரடைப்பு வராமல் பாதுகாக்கிறது. இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. வாய்வுத் தொல்லையைப் போக்குகிறது. மூட்டு வலியைக் குறைக்கிறது.


வெங்காயம்:



வெங்காயத்தைத் தொடர்ந்து உண்டு வந்தால் இரத்தத்தின் கொலஸ்ட்ரால் அளவு குறைவதோடு இரத்தத்தின் உறை தன்மையும், ஒட்டும் தன்மையும் குறைவதால் மாரடைப்பு நோய் வரவே வராது.
மாரடைப்பு போன்ற இருதய நோய்கள் வராமல் தடுக்கும் சக்தி வெங்காயத்திற்கு உண்டு என்று பல ஆராய்ச்சிகள் மூலம் தெளிவாக்கப்பட்டுள்ளது.
இரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு மாரடைப்பு வந்தவர்களும் கூட தினமும் 100 கிராம் வெங்காயத்தைத் தொடர்ந்து உண்டு வந்தால் படிப்படியாக இருதய ரத்த நாளங்களில் உள்ள அடைப்புகள் கரைந்து மறைந்துவிடுவதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.


ஆப்பிள்:



இதில் உள்ள `பெக்டின்' என்ற நார்ச்சத்து இரத்தத்தின் கொலஸ்ட்ரால் அளவைக் குறைப்பது ஆய்வுகளின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.
இரத்தத்தில் கொலஸ்ட்ரால் அதிகம் உள்ளவர்கள் தினம் இரண்டு ஆப்பிள் பழங்களைத் தொடர்ந்து மூன்று மாதங்கள் சாப்பிட்டு வந்தால், கொலஸ்ட்ரால் அளவு 10லிருந்து 15 சதவிகிதம் வரை குறைந்துவிடுகிறது. ஆப்பிள் பழத்தில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமுள்ளது.


அன்னாசி:



இரத்தக் குழாய்களில் ஏற்படும் அடைப்பை நீக்குவதில் அன்னாசி சிறந்து விளங்குகிறது. மேலும், அன்னாசிப் பழத்தை தொடர்ந்து உண்டு வந்தால் இரத்தத்தில் உறையும் தன்மை குறைவதோடு, இரத்தக் குழாய்களில் உள்ள அடைப்புகளும் நீங்கும்.


எலுமிச்சம்பழம்



:உடம்பிலுள்ள சிறிய இரத்தக் குழாய்களின் சுவர்களை எலுமிச்சையில் உள்ள சத்துக்கள் உறுதிப்படுத்துவதோடு சிறுநீரகங்களில் இரத்த ஓட்டத்தையும் அதிகரிக்கிறது. எலுமிச்சையில் `பெக்டின்' சத்து உள்ளதால் இரத்தத்திலுள்ள கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கிறது.


பூண்டு:



 இதில் `சாலிசிலிக்' என்ற இரசாயனப் பொருள் உள்ளது. நாம் சாப்பிடும் உணவின் மூலம் இரத்தக் குழாய்களில் அதிக அளவு கொழுப்பு சேர்ந்து அடைப்பை உண்டாக்கும் போது பூண்டிலுள்ள `சாலிசிலிக்' என்ற சத்து அந்த அடைப்பை உடைத்துவிடுகிறது.
தாமரைப்பூவிலும் இச்சத்து உண்டு.



சுரைக்காய்:



 இரத்தக் குழாய்களில் படிந்துள்ள அடைப்பை நீக்குவதில் சுரைக்காய் பலே கில்லாடி! சுரைக்காய் சாற்றை வெறும் வயிற்றில் 200 மிலி மூலம் தொடர்ந்து ஒரு மாதம் குடித்து வந்தால் இரத்தக் குழாய்களில் படிந்துள்ள அடைப்புகள் தவிடு பொடியாகிவிடும்.

வெள்ளரிக்காய்:



 இயற்கை அன்னை நமக்கு நல்கிய அற்புதமான காய். இரத்தத்திலுள்ள யூரிக் ஆசிட்டைக் கணிசமாக குறைத்து, இதயத்தின் செயல்பாட்டைச் சுறுசுறுப்பாக இயக்க வல்லது. இரத்தக் குழாய்களில் ஏற்படும் அடைப்பை நீக்குவதில் இதற்கும் பங்கு உண்டு.

தர்ப்பூசணி:



 இதயத்தைக் குளிரச் செய்து இரத்தக் குழாய்களின் அடைப்பைப் போக்கி இரத்த ஓட்டத்தைச் சீர்படுத்துகிறது.



முள்ளங்கி, வெண்டைக்காய்: 



இந்தக் காய்களைத் தினசரி காலையில் பச்சையாகச் சாப்பிட்டு வந்தால் இரத்தக் குழாய்களில் படிந்துள்ள அடைப்புகள் மூன்றே மாதங்களில் 80 சதவிகிதம் ஒழிக்கப்பட்டுவிடும். ஆனால் தொடர்ச்சியாக சாப்பிட வேண்டும்.
எனவே, காய்களையும் பழங்களையும் நிறையச் சாப்பிட்டு இரத்தக் குழாய்களில் படிந்துள்ள அடைப்புகளைப் போக்கி மாரடைப்பு நம்மைத் தாக்காத வண்ணம் இன்புற்று வாழலாம்.


கொலஸ்ட்ரால் ஃப்ரீ உணவுகள்

டயட் பேட்டீஸ்

தேவையான பொருள்கள்:
பொடியாக நறுக்கிய முட்டைகோஸ் - 1 கப்,
நறுக்கிய குடைமிளகாய் - 1 கப்,
பட்டாணி - 1 கப்,
பொடியாக நறுக்கிய கேரட்- 1/2 கப்,
கோதுமை பிரட் - 6 ஸ்லைஸ்,
நறுக்கிய பச்சை மிளகாய் - 2 டீஸ்பூன்,
கொத்துமல்லி - 1கப்,
உப்பு, ஆலிவ் ஆயில் - தேவைக்கேற்ப,
பிளாக்ஸ் சீட்ஸ் (flax seeds) (ராகி நிறத்தில் அரிசி போல இருக்கும்) இலேசாக வறுத்துப் பொடித்தது - 1 கப்.
செய்முறை:
வாணலியில் ஆலிவ் எண்ணெய் விட்டு, பச்சை மிளகாய், நறுக்கிய காய்களைச் சேர்க்கவும். நன்கு வதங்கியவுடன் உப்பு சேர்த்து, கொத்துமல்லி தழை தூவி இறக்கவும். வெதுவெதுப்பான நீரில் பிரட் ஸ்லைஸ்களை நனைத்து, ஒட்டப்பிழிந்து காய்கறிக் கலவை-யுடன் சேர்க்கவும். எலுமிச்சைச் சாறு சேர்க்கவும். இந்தக் காய்கறிக் கலவையை எலுமிச்சை அளவு எடுத்து விருப்பமான வடிவங்களில் (தட்டை / உருண்டை) செய்து கொள்ளவும். பொடித்து வைத்துள்ள flax seedsல் புரட்டி, நான்ஸ்டிக் தவாவில் ஃப்ரை செய்யவும். தேவைப்பட்டால் சிறிது ஆலிவ் ஆயிலை விடவும். கெட்சப் அல்லது மல்லி சட்னியுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.
ஆலிவ் ஆயில் ‘ஜீரோ கொலஸ்ட்ரால்’ தன்மை கொண்டது. ஃபிளாக் விதைகள் கெட்ட கொலஸ்ட்ராலைக் கரைப்பதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

சிறுதானியப் பொடி

தேவையான பொருள்கள்:
கோதுமை, உளுத்தம் பருப்பு -
தலா 1/2 கப்,
உளுத்தம் பருப்பு, தினை அரிசி, கம்பு,
கேழ்வரகு, வரகரிசி - தலா 1/4 கப்,
பாசிப் பருப்பு, கடலைப் பருப்பு, புழுங்கல் அரிசி, மிளகு, சீரகம், வெந்தயம்- தலா 2 டீஸ்பூன்,
மஞ்சள், சுக்கு - தலா 1 துண்டு,
கடுகு - 1 ஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு
பருப்பு, தானிய வகைகளை வெறும் வாணலி-யில் தனித்தனியே மணம் வரும் வரை வறுத்துக் கொள்ளவும். அனைத்தையும் ஒன்றாகக் கலந்து மிஷினில் மாவாக அரைத்து வைத்துக் கொள்ளவும்
.
செய்முறை :
தேவையான அளவு மாவை எடுத்துக் கரைத்து தோசையாகச் சுட்டுச் சாப்பிடலாம். தொட்டுக் கொள்ள எதுவும் தேவையில்லை. மாவில் காரம் இருக்கும்.
அரை கப் தயிர் எடுத்து, அதில் பச்சை மிளகாய், கடுகு, கறிவப்பிலை தாளித்து, 2 டீஸ்பூன் சிறு தானியப் பொடியைப் போட்டுக் கலக்கினால் பச்சடி தயார்.
தேவையெனில், அதில் ஒரு பெரிய வெங்காயம் நறுக்கிப் போடலாம். சப்பாத்தி, ரைஸ் வகைகளுக்குத் தொட்டுக் கொள்ள ஏற்றது.
மாவில் சிறிது நீர் தெளித்து, உப்புப் போட்டு பிசிறி, புட்டாக அவித்து எடுக்கலாம். தேவையெனில் தேங்காய்த் துருவல் தூவி இறக்கலாம்.
மாவைக் கெட்டியாகக் கரைத்து, வெங்காயம் வதக்கிப் போட்டு குழிப்பணியாரமாகச் செய்யலாம்.
சத்துக்கள் நிறைந்தது. கொலஸ்ட்ரால் இல்லாதது.

நியூட்ரிஷியஸ் பேல்

தேவையான பொருள்கள்:
எண்ணெய் சேர்க்காமல் வாணலியில் வறுத்த வேர்க்கடலை, முளைகட்டிய பாசிப் பயறு - தலா 1/4 கப்,
பொடியாக நறுக்கிய தக்காளிப் பழம்- 1/2 கப்,
பழுத்த மாதுளை விதை - 1/4 கப்,
பொடியாக நறுக்கிய ஆப்பிள் - 1 கப்,
மாங்காய் துருவியது - 1/4 கப்,
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1 கப்,
கார்ன்ஃப்ளேக்ஸ் - 1/2 கப்,
கரம் மசாலாத் தூள் - 1/2 டீஸ்பூன்,
எலுமிச்சைச் சாறு - 1 டேபிள் ஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு,
பொடியாக நறுக்கிய கொத்துமல்லி - 1/4 கப்,
உருளைக்கிழங்கு வேகவைத்து பொடியாக நறுக்கியது - 1 கப்,
இனிப்புச் சட்னிக்கு தேவையான பொருள்கள்:
மிளகாய்த் தூள் - 1/2 டீஸ்பூன்,
புளி - நெல்லிக்காய் அளவு,
பேரீச்சம் பழம் - விதை நீக்கியது - 6,
உலர்ந்த திராட்சை - 2 டேபிள் ஸ்பூன்,
வெல்லம் - 1 டேபிள் ஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு
சட்னி செய்முறை:
புளி, திராட்சை, பேரீச்சம்பழம் இவற்றை ஊறவைத்து நைஸாக அரைத்துக் கொள்ளவும். வெல்லம், உப்பு, மிளகாய்த் தூள் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் வீட்டு சற்றுக் கட்டியாக ஆகும் வரை அடுப்பில் வைத்துக் கொதிக்கவிட்டு இறக்கினால் இனிப்புச் சட்னி தயார்.
பேல் தயார் செய்யும் முறை :
நறுக்கிய ஆப்பிள் துண்டுகளின் மேல் எலுமிச்சைச் சாறு விட்டுக் கலக்கவும். ஆப்பிள் நிறம் மாறாமல் இருக்கும்.
ஒரு வாயகன்ற பாத்திரத்தில் வேர்க்கடலை, பயறு, தக்காளிப் பழம், மாதுளை விதை, மாங்காய், உருளைக்கிழங்கு, வெங்காயம், எலுமிச்சம் பழச்சாறு கலந்த ஆப்பிள் துண்டுகள், கார்ன்ஃப்ளேக்ஸ், உப்பு சேர்த்துப் போட்டு மெதுவாகக் குலுக்கி வைக்கவும்.
பரிமாறுவதற்கு முன் பேலை தட்டில் போட்டு, தேவையான அளவு சட்னி விட்டுக் கலக்கவும். கரம் மசாலாப் பொடி தூவி, பச்சைக் கொத்து-மல்லி தூவி பரிமாறவும். எல்லாவித வைட்டமின்களும் அடங்கிய நியூட்ரிஷியஸ் பேல் சுவையிலும் அசத்தும்.

கிரிஸ்பி சான்ட்விச்


தேவையான பொருள்கள்:
சதுர வடிவ ரஸ்க் - 4,
முளைகட்டிய பயிறு - 3 டேபிள் ஸ்பூன்,
காரட் துருவியது - 4 டேபிள் ஸ்பூன்,
வெள்ளரிக்காய், கோஸ் துருவியது -
தலா 2 டீஸ்பூன்,
எலுமிச்சம் பழம் - 1/2 மூடி,
மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு,
கொத்துமல்லித் தழை பொடியாக அரிந்தது - சிறிதளவு
புதினா - சிறிதளவு
செய்முறை:
பாத்திரத்தில் துருவிய காரட், கோஸ், வெள்ளரிக்காய் ஆகியவற்றை சேர்த்துக் கொள்ளவும். முளைகட்டிய பயிறை நன்கு கொதிக்கும் தண்ணீர் ஊற்றி ஊறவைக்கவும். அளவாகத் தண்ணீர் ஊற்றவும். பிறகு அதை வடித்துக் காய்களுடன் சேர்த்துக் கலக்கவும். வெள்ளரிக்காயிலிருந்து தண்ணீர் வடியும். அதனால் அதை வடிகட்டியில் போட்டுத் தண்ணீர் வடிந்தபின் சேர்க்கவும். இப்பொழுது இதில் எலுமிச்சம் பழம் பிழிந்து தேவையான உப்பு, மிளகுத்தூள் சேர்த்துக் கலக்கவும். பொடியாக அரிந்த கொத்துமல்லி, புதினா சேர்த்துக் கலக்கவும்.
சதுர வடிவ ரஸ்கின் மீது இந்தக் கலவையை வைத்து மற்றொரு ரஸ்கால் மூடிப் பரிமாறவும். இதில் எண்ணெய், வெண்ணெய் போன்ற கொழுப்பு உணவுப்பொருட்கள் இல்லாததால் இது கொலஸ்ட்ரால் ஃப்ரீ ஸ்நாக். அதே சமயம் சுவையாகவும், நிறைவாகவும் இருக்கும். காலை, மாலை எந்த வேளையும் சாப்பிடலாம். டீன்-ஏஜ்காரர்கள் தாங்களே செய்து சாப்பிடக்கூடிய சுலபமான சுவையான ஸ்நாக் இது!

வெஜிடபிள் தால் புட்டு

தேவையான பொருள்கள்:
பச்சரிசி - 1/2 கப்,
சம்பா கோதுமை ரவை - 1/2 கப்,
ராஜ்மா, கொள்ளு, கடலைப் பருப்பு, பாசிப் பயறு, சோயா, சோளம், கேழ்வரகு, பச்சைப் பட்டாணி - தலா 1/4 கப்,
பொடியாகத் துருவிய காரட், பீன்ஸ், முட்டைக்கோஸ் எல்லாம் கலந்தது - 1/2 கப்,
கீறிய பச்சைமிளகாய் - 4,
மஞ்சள் தூள் - சிறிதளவு,
உப்பு - தேவையான அளவு,
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்,
எலுமிச்சைச் சாறு - 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
அடுப்பில் வாணலியை வைத்துச் சூடானதும், கோதுமை ரவையை இலேசாக வறுக்கவும். மற்ற தானியங்களை ஒவ்வொன்றாகத் தனித்தனியே வாசனை வரும்வரை வறுத்து, ஆறியதும் ஒன்றாகப் போட்டு, மிக்ஸியில் பொடித்து சலித்துக் கொள்ளவும். மிஷினிலும் கொடுத்தும் அரைக்கலாம்.

அரைத்த மாவுடன் வறுத்த கோதுமை ரவையைக் கலந்து, உப்பு கரைத்த நீர் தெளித்து பிசிறி வைக்கவும். அரை மணி நேரம் கழித்து, சூடான வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், காய்கறிகளைப் போட்டு, உப்பு, மஞ்சள் தூள், பச்சை மிளகாய் சேர்த்து இலேசாக வதக்கவும். பிறகு பிசிறி வைத்திருக்கும் மாவுடன், வதக்கிய காய்கறிகளைக் கலந்து, இட்லித் தட்டில் வைத்து ஆவியில் வேகவிடவும். புட்டு வெந்து, கொஞ்சம் ஆறியதும் உதிர்த்துவிட்டு,எலுமிச்சைச் சாறு கலந்து பரிமாறவும். ஆவியில் வேகவைக்கப்பட்ட இந்தச் சுவையான புட்டு மிகவும் சத்தானதும் கூட!

பாட்டி வைத்தியம்,

1. நெஞ்சு சளிக்கு தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும்.

*
2. தலைவலிக்கு ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.

*

3. தொண்டை கரகரப்புசுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும்.

*

4. தொடர் விக்கல்uக்கு நெல்லிக்காய் இடித்து சாறு பிழிந்து, தேன் சேர்த்து சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும்.

*

5. வாய் நாற்றம் சட்டியில் படிகாரம் போட்டு காய்ச்சி ஆறவைத்து அதனை ஒரு நாளைக்கு மூன்று வேளை வாய் கொப்பளித்து வந்தால் வாய் நாற்றம் போகும்.

*
6. உதட்டு வெடிப்புக்கு கரும்பு சக்கையை எடுத்து எரித்து சாம்பலாக்கி, அதனுடன் வெண்ணெய் கலந்து உதட்டில் தடவி வர உதட்டு வெடிப்பு குணமாகும்.

*

7. அஜீரணம் ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம், மூன்றையும் கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி குடிக்க அஜீரணம் சரியாகும்.

*

8. குடல்புண்க்கு மஞ்சளை தணலில் இட்டு சாம்பல் ஆகும் வரை எரிக்க வேண்டும். மஞ்சள் கரி சாம்பலை தேன் கலந்து சாப்பிட குடல் புண் ஆறும்.

*

9. வாயு தொல்லைக்கு வேப்பம் பூவை உலர்த்தி தூளாக வெந்நீரில் உட்கொள்வதினால் வாயுதொல்லை நீங்கும். ஆறாத வயிற்றுப்புண் நீங்கும்.

*
10. வயிற்று வலிக்கு வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடி செய்து மோரில் குடிக்க வயிற்று வலி நீங்கும்.

*

11. மலச்சிக்கல் செம்பருத்தி இலைகளை தூள் செய்து, தினமும் இருவேளை சாப்பிட்டு வர மலச்சிக்கல் தீரும்.

*

12. சீதபேதிமலை வாழைப்பழத்தை நல்லெண்ணையில் சேர்த்துச் சாப்பிட சீதபேதி குணமாகும்.

*

13. பித்த வெடிப்புக்கு கண்டங்கத்திரி இலைசாறை ஆலிவ் எண்ணையில் காய்ச்சி பூசி வந்தால் பித்த வெடிப்பு குணமாகும்.

*
14. மூச்சுப்பிடிப்புக்கு சூடம், சுக்கு, சாம்பிராணி, பெருங்காயம் இவைகளை சம அளவு எடுத்து சேர்த்து வடித்த கஞ்சியில் கலக்கி மறுபடியும் சூடுபடுத்தி மூச்சுப்பிடிப்பு உள்ள இடத்தில் மூன்று வேளை தடவினால் குணமாகும்.

*

15. சரும நோய்க்கு கமலா ஆரஞ்சு தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து தினமும் சோப்புக்கு பதிலாக உடம்பில் தேய்த்து குளித்து வர சரும நோய் குணமாகும்.

*

16. தேமல் வெள்ளை பூண்டை வெற்றிலை சேர்த்து மசிய அரைத்து தினமும் தோலில் தேய்த்து குளித்து வர தேமல் குணமாகும்.

*

17. மூலம் கருணைக் கிழங்கை சிறுதுண்டுகளாய் நறுக்கி துவரம் பருப்புடன் சேர்த்து, சாம்பாராக செய்து சாப்பிட்டு வர மூலம் குணமாகும்.

*
18. தீப்புண் வாழைத் தண்டை சுட்டு அதன் சாம்பலை தேங்காய் எண்ணையில் கலந்து தடவி வர தீப்புண், சீழ்வடிதல் மற்றும் காயங்கள் விரைவில் குணமாகும்.

*

19. மூக்கடைப்புக்கு ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி அரை லிட்டர் நீரில் போட்டு சுண்டக் காய்ச்சி, பால், சர்க்கரை சேர்த்துக் காலை, மாலை சாப்பிட்டு வர மூக்கடைப்பு விரைவில் நீங்கும்.

*

20. வரட்டு இருமல் எலுமிச்சம் பழசாறு, தேன் கலந்து குடிக்க வரட்டு இருமல் குணமாகும்

*

21. நரம்பு சுண்டி இழுத்தால் ஊற வைத்து, முளைக்க வைத்ததானிய வகைகளை சாப்பிட்டால் இந்த நோய் வராது. வாரத்தில் 3 தடவைகளாவது சேர்த்துக் கொண்டால் நல்ல பலன் இருக்கும். நரம்பு நாளங்களை சாந்தப்படுத்தும் குணம் தேனுக்கு உடையது.


*

22. பல்லில் புழுக்கள் சிறிது வேப்பங்கொழுந்து எடுத்து, நன்றாக பற்களின் எல்லாப் பகுதியிலும் படும்படி மென்று சாப்பிட வேண்டும்.

*

23. உடல் பருமன் குறைய வெங்காயத்தில் கொழுப்புச் சத்து குறைவு. அதனால் உடல் பருமனைக் குறைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் உணவில் தாராளமாக வெங்காயம் சேர்த்துக் கொள்ளலாம்.

*

24. தேன் உடல் பருமனைக் குறைக்கும்.தேனுடன் குளிர்ந்த தண்ணீரை கலந்து அருந்தினால் உடல் பருமன் குறையும்.


*

25. வெண்மையான பற்களைப் பெற ஒவ்வொரு முறையும் சாப்பிட்ட பின்பு வாயை நன்றாகக் கழுவ வேண்டும். தூங்கப் போகும் முன்பும், தூங்கி எழுந்த பின்பும் பல் தேய்க்க வேண்டும். பல்தேய்த்துக் கழுவும் போது ஈறுகளைத் தேய்த்துத் தடவி கழுவ வேண்டும். இதனால் பற்களும் ஈறுகளும் வலுவடையும்.


*

26. கணைச் சூடு குறைய சூட்டினால் சில குழந்தைகள் உடல் மெலிந்து நெஞ்சுக் கூடு வளர்ச்சி இன்றி மெலிவாகவும் இருப்பார்கள். அவர்களுக்கு தினமும் ஆட்டுப்பாலில் 2 தேக்கரண்டி தேன் கலந்து கொடுத்தால் கணைச் சூடு குறைந்து உடல் தேறிவிடும்.


*

27. வலுவான பற்கள் வேப்பங்குச்சியினால் பல் துலக்கினால் பற்கள் நல்ல ஆரோக்கியமாக இருக்கும்.முருங்கைக்காயை நறுக்கி, பொரியல் செய்து அல்லது சாம்பாரில் போட்டு சாப்பிட்டால் பற்கள் வலுவடையும். தினமும் சாப்பிட்டால் வயோதிகத்திலும் பற்கள் நன்கு உறுதியாக இருக்கும்.


*

28. உடல் சூடு ரோஜா இதழ்கள், கல்கண்டு, தேன் ஆகியவற்றைக் கலந்து தயாரிக்கும் குல்கந்தை தினமும் சாப்பிட்டு வந்தால் உடல் சூடு தணியும்.

*

29. கற்கண்டு சாப்பிடுவதால் இரத்தம் சுத்தமாகும். கண்களில் ஏற்படும் திரை அகன்று, கண்னொளி பெருகும். கண் சிவப்பை மாற்றும். வெண்ணெய்யில் சேர்த்து தினமும் சாப்பிட்டு வந்தால் உடல் பெருக்கும்.

*
30. கக்குவான் இருமல் வெற்றிலைச் சாறுடன், தேன் கலந்து கொடுத்தால் குழந்தைகளுக்கு வரும் கக்குவான் இருமல் குணமாகும்.

*

31. உள்நாக்கு வளர்ச்சி உப்பு, தயிர், வெங்காயக் கலவை உள்நாக்கு வளர்ச்சியைத் தடுக்கும்.

*

32. இரத்தசோகை நோய்க்கு தேன் ஏற்ற மருந்து. இதற்குக் காரணம் அதில் இரும்புச்சத்து இருப்பதாகும்.ஆட்டுப் பாலை வடிகட்டி, தேன் கலந்து பருகினால் உடல் வலிமை ஏற்படும். உடலுக்குத் தேவையான இரத்தத்தை ஊறச் செய்யும்.

*

33. உடலில் தேமல் மறைய தொடர்ந்து மருந்து எடுத்துக்கொண்டால் மட்டுமே குணமாகும்.

வெதுவெதுப்பான தண்ணீரில் எலுமிச்சம் பழச்சாறு கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.


எலுமிச்சம் பழச் சாற்றை முகத்தில் தேய்த்து, சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும்.
ஆடு தீண்டாப் பாளையை, தேங்காய் எண்ணெய்யில் போட்டு, 1 வாரம் வெய்யிலில் வைத்த பிறகு தேமல் இருக்குமிடத்தில் தடவினால் தேமல் மறையும்.


மோரில் முள்ளங்கியை அரைத்து இந்தக் கலவையை முகத்தில் தேய்த்தால் தேமல் மறையும்.


1 துண்டு வசம்புடன் பூவாரம்பட்டை சேர்த்து அரைத்து இரவில் பற்றுப் போட்டு வந்தால் நாளடைவில் தேமல் குணமாகும்.


குறிப்பு: சோப்பு போட்டுக் குளிக்கக் கூடாது.

*

34. மலேரியாவால் தாக்கப்பட்டவடர்கள் தினமும் துளசி இலையை சிறிதளவு காலையில் வெறும் வயிற்றில் மென்று விழுங்கி வந்தால் ஓரிரு நாட்களில் நோய் நீங்கிவிடும்.
மலேரியா போன்ற நோய்கள் பரவக் கொசுக்களே மூல காரணம். துளசியின் வாடை பட்டால் கொசுக்கள் அவ்விடத்திற்கு வராது. கொசு தொல்லையை நீக்க வீட்டில் துளசி செடிகளை வளர்க்கலாம்.


*

35. தீக்காயங்கள் பட்டவுடன் முதலில் தண்ணீரில் கழுவ வேண்டும்.
தீப்பட்ட புண்ணின் மேல் தொடர்ந்து தேன் தடவி வந்தால் புண் குணமாகி விடும். தீக்காயங்களை ஆற்றுவதற்கு தேன் உகந்தது. வலி நீங்கும். தீக்கொப்புளங்கள் ஏற்படாமல் தடுக்கும்.

முட்டைக்கோஸ் இலைகளை சிறுசிறு துண்டுகளாக்கி, முட்டையில் உள்ள வெள்ளைக் கருவுடன் கலந்து தீக்காயங்கள், புண்கள், காயங்கள் மீது தடவினால் விரைவான குணம் கிடைக்கும்.

தீப்புண்களுக்கு முட்டையின் வெள்ளைக் கருவைத் தடவி குணப்படுத்தலாம்.

Wednesday, August 24, 2011

தால் சூப்


வெஜிடபிள் சூப், காளான் சூப், தக்காளி சூப் என்று பலவகையான சூப் வகைகளை செஞ்சு சாப்ட்ருப்போம். அந்த வகையில் தால் சூப்பும் மிக சுவையானதொரு சூப். சுவையுடன் இருப்பதோடு ஆரோக்கியத்தையும் தரவல்லது இந்த சூப். சமையல் ராணிகள் இதையும் ட்ரை பண்ணிப்பாருங்க.. சூப்பரா சூப் குடிங்க......

தேவையான பொருள்கள்:

மைசூர் பருப்பு - 1/2 கப்
வெண்ணெய் - 1/2 டீ ஸ்பூன்
வெங்காயம் நறுக்கியது - 1 டீ ஸ்பூன்
பூண்டு - 2 பல்
தக்காளி சிறியது - 2
மல்லித்தழை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

* முதலில் வெண்ணெயைச் சூடாக்கி அதில் பூண்டு, வெங்காயத்தை வதக்கவும்.

* இரண்டு நிமிடம் கழித்து இத்துடன் பருப்பு, முழுத்தக்காளி உப்பு மூன்றையும் சேர்த்து வேக விடவும்.

* குக்கரில் ஒரு விசில் வந்தவுடன் ஐந்து நிமிடம் குறைந்த தீயில் வைத்து வேக விடவும்.

* பிறகு வெந்த தக்காளியின் மேல் தோலை நீக்கி விட்டு மிக்ஸியில் ஸ்மூத்தாக அரைத்து பருப்புக் கலவையுடன் சேர்த்து மல்லி இலையை தூவிப் பரிமாறவும்!

* காரம் தேவை என்றால் மிளகுத் தூள் சேர்த்துச் சாப்பிடலாம்.

ரசப் பொடி


சுடச்சுட மணக்கும் ரசத்தை உள்ளங்கையில் ஊற்றிக் குடிக்கையிலோ, சாதத்துடன் கலந்து சாப்பிடுகையிலோ கிடைக்கும் சுகானுபவம் அனுபவித்தவர்களுக்குத்தான் புரியும். நம் தென்னிந்தியாவின் பிரசித்திக்குப் பேர் பெற்ற பல காரணங்களில் ரசமும் ஒன்று அல்லவா! ஜுரம் வருவதுபோல இருந்தாலும் சரி, ஜுரம் வந்து மீண்டு எழுகையிலும் சரி, ஜலதோஷம் பிடித்தாலும், தொண்டை கமறினாலும் சுடச்சுட ரசத்தை சேர்த்து பரிமாறி, ரசம் எல்லாவற்றையும் சரியாக்கும் என்ற நம்பிக்கையை நம்முள் வளர்த்து விட்டிருப்பதை தென்னிந்தியர் பலரும் மறுக்க மாட்டார்கள் தானே......

தேவையான பொருட்கள்:

மஞ்சள் - 50 கிராம்
தனியா - 400 கிராம்
மிளகாய் வற்றல் - 250 கிராம்
மிளகு - 50 கிராம்
சீரகம் - 100 கிராம்
துவரம் பருப்பு - 250 கிராம்

செய்முறை:

* இவற்றை வெயிலில் நன்கு காய வைத்து நைசாக அரைத்துப் பொடியாக்கினால் ரசப் பொடி தயார்.

* காற்றுப் புகாத டப்பாக்களில் அடைத்து வைத்து தேவைக்கேற்ப உபயோகிக்கலாம்.

மாம்பழப் பாயசம்


குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்ணும் முக்கனியின் முதல் கனி மாம்பழம். பார்த்த உடன் சாப்பிடத் தூண்டும் மாம்பழ சீசன் ஆரம்பிச்சாச்சு... இனி என்ன சுவையான மாம்பழ ரெசிபியா சமைச்சு அசத்துங்க...!

தேவையான பொருட்கள்:

இனிப்பான மாம்பழங்கள் - 4
சர்க்கரை - 150 கிராம்
பால் - அரை லிட்டர்
உடைத்த முந்திரிப் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
உலர்ந்த திராட்சை - அரை டேபிள் ஸ்பூன்
ஏலக்காய்த் தூள் - சிறிதளவு

செய்முறை:

* மாம்பழங்களைக் கழுவி ஆவியில் வேக வைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

* சூடு ஆறியதும் தோல், கொட்டை இவற்றை நீக்கிவிட்டுச் சாறெடுத்து இரண்டு கப் தண்­ணீர் சேர்த்து அத்துடன் சர்க்கரையையும் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.

* நன்றாகக் கொதித்ததும் இறக்கி வைத்து முந்திரி கிஸ்மிஸ் பழங்களை நெய்யில் வறுத்து அத்துடன் சேர்த்து நன்றாக ஆற வைக்க வேண்டும்.

* பாலில் கொஞ்சம் தண்­ணீர் சேர்த்து நன்றாக கொதிக்கவிட்டு இறக்கி வைக்க வேண்டும்.

* மாம்பழச் சாறு ஆறியவுடன் பாலுடன் ஏலக்காய்ப் பொடியைத் தூவி கலக்கிவிட்டு பரிமாறவும்.

கத்திரிக்காய் ஃப்ரை


எனக்கு கத்திரிக்காயே பிடிக்காதுனு சொல்றவங்க நிறைய பேர் இருக்காங்க.... அப்படிபட்டவங்களுக்கு இந்த மாதிரி வித்தியாசமா கத்திரிக்காய் ஃப்ரை செஞ்சு கொடுத்தா.. உடனே கத்திரிக்காய் ஃபேவரைட் ஆகிடுவாங்க பாருங்க.....

தேவையான பொருட்கள்:

பெரிய கத்திரிக்காய் - 1
சிக்கன் 65 மசாலா - 2 டேபிள் ஸ்பூன்
எலுமிச்சை சாறு - 1 டீ ஸ்பூன்
இஞ்சி-பூண்டு விழுது - 1/2 டீ ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

* கத்திரிக்காயை சிறிது தடிமனாக வட்டமாக நறுக்கவும்.

* ஒரு பாத்திரத்தில் சிக்கன் மசாலா, எலுமிச்சை சாறு, உப்பு, இஞ்சி-பூண்டு விழுது, எண்ணெய் 2 டீ ஸ்பூன் என அனைத்தையும் ஒன்றாக கலந்து கத்திரிக்காயில் தடவி 10 நிமிடம் வைக்கவும்.

* நான் ஸ்டிக் கடாயில் சிறுதீயில் இரண்டு புறமும் வேகவைத்து எடுக்கவும். ஏற்கனவே எண்ணெய் சேர்த்து பிசைந்திருப்பதால் தேவையானால் மட்டும் எண்ணெய் விட்டு வேகவைக்கவும்.

* சாம்பார், தயிர், ரசம் சாதமுடன் சாப்பிட மிகவும் நன்றாகயிருக்கும்.

Friday, August 12, 2011

நோன்புக் கஞ்சி

புனித ரமலான் மாதம் வந்துவிட்டது. ரமலான் மாதத்தில் அனைத்து மதத்தினரும் விரும்பி உண்ணக் கூடியது நோன்புக் கஞ்சி. நாள் முழுவதும் நோன்பு நோற்று வாடிப் போய் இருப்பவர்களுக்கு புத்துணர்ச்சி அளிப்பது இந்த கஞ்சி. அத்தகைய நோன்புக் கஞ்சியை தயாரிப்பது எப்படி என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்: 

பச்சரிசி = 500கிராம்
பூண்டு = 1 முழு பூண்டு
கடலைப்பருப்பு = 50 கிராம்
வெந்தயம் = 2 தேக்கரண்டி
இஞ்சி = இருவிரல் அளவு
சீரகப்பொடி = 2-3 தேக்கரண்டி
மஞ்சள் பொடி = 1 டீ ஸ்பூன்
மிளகாய்பொடி = அரை டீ ஸ்பூன்
உப்பு = தேவையான அளவு
பெரிய வெங்காயம் = 2
கேரட் =2
 பாதிதக்காளி 
சமையல் எண்ணை = 50 மில்லி
பச்சை மிளகாய் = 2-3 (காம்பு நீக்கியது)
புதினா+மல்லி = தலா ஒரு கொத்து
எலுமிச்சம் பழம் = 1தேங்காய்ப் பால் = 300 மில்லி
மட்டன் எலும்பு/கறி = 100 கிராம் 

சமைக்கும் முன்பு செய்ய வேண்டியவை:
1) சாதாரண தண்ணீரில் பச்சரிசி, வெந்தயம், கடலைப் பருப்பு ஆகியவற்றை நன்கு அலசி தண்ணீர் வடித்து தனியாக எடுத்து வைக்கவும்.
2) ஆட்டுக்கறி அல்லது நெஞ்செலும்பை நீரில் அலசி உப்பு, மஞ்சள்பொடி, மிளகாய்பொடி ஆகியவற்றை கலந்து தயாராக வைக்கவும்.
3) தக்காளி, வெங்காயத்தை சிறுசிறு துண்டுகளாக நறுக்கவும்.
4) புதினா, கொத்தமல்லியை காம்பு நீக்கி இலைகளை மட்டும் எடுத்துக் கொள்ளவும்.
5) கேரட் மற்றும் பாதி இஞ்சியை சிறுசிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்
6) எஞ்சிய இஞ்சியையும், பூண்டையும் தோல் நீக்கி மிக்ஸியில் நைசாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.

செய்முறை:
7) சட்டியை அடுப்பில் வைத்து சூடாக்கி தேவையான அளவு எண்ணைவிட்டு வெங்காயத்தை வதக்கவும்.
8) நன்கு வதங்கிய வெங்காயத்துடன் தக்காளியை சேர்த்து மேலும் வதக்கவும்.
9) ஆட்டிறைச்சி/ நெஞ்செலும்பையும் கலந்து மேலும் சிறிது நேரம் வதக்கவும்.
10) நறுக்கிய கேரட் துண்டுகள் மற்றும் முழு பச்சைமிளகாயையும் சேர்த்து வதக்கவும்.
11) வதங்கும்போது சீரகப் பொடி, மஞ்சள் பொடியை சிறிதளவு தண்ணீரில் கரைத்து ஊற்றவும்.
12) மல்லித் தழையைத் தூவி, சட்டியை 5-6 நிமிடங்கள் மூடி வைக்கவும்.
13) அடி பிடிக்காதபடி தேவையான அளவு நெருப்பைக் குறைத்து 1:3 அளவு தண்ணீரில் கொதிக்க விடவும்.
14) கொதி வந்த பிறகு அரிசியை சட்டிக்குள் மெல்ல இட்டு தொடர்ந்து 30-45 நிமிடங்கள் கொதிக்க விடவும்.
15). கொதிக்கும்போது பாதி எலுமிச்சை சாற்றை ஊற்றவும்.
16) தேவையான அளவு உப்பிட்டு சட்டியின் அடிப்பாகம் பிடிக்காத வகையில் அடிக்கடி கிளறவும்.
17) அரிசி கரைந்த பிறகு தேங்காய்ப் பாலுடன் சமபங்கு தண்ணீர் கலந்து மேலும் ஓரிரு நிமிடங்கள் கிளறவும்.
18) புதினா இலையை கஞ்சியில் தூவி, சட்டியை நன்கு மூடிவைக்கவும்.சுவையான நோன்புக் கஞ்சி தயார்.



நன்றி ; ராபி அன்னண்

ஷாகி பன்னீர்

பன்னீர் சேர்த்து செய்யப்படும் உணவுப் பொருட்கள் பால்சார்ந்த பொருட்களிலேயே மிக மிக சுவை வாய்ந்தவை. இப்படி பால் சார்ந்த பொருட்களுக்கு மகுடம் வைத்தாற்போல் விளங்குவதால் தானோ என்னவோ, அதனை அரச குடும்பத்தினரே 'ஷாகி பன்னீர்' என்ற உணவு வகையாகச் செய்து சாப்பிட்டனர். உடல் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு தேவையான கால்சியம், புரதம், மிதமான கொழுப்பு அனைத்தும் நிறைந்த பன்னீர் தற்காலத்தில் பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவராலும் விரும்பப்படுகிறது. அரச குடும்பத்தினர் உண்டு களித்ததாகக் கருதப்படும் 'ஷாகி பன்னீர்' உணவு வகையை மிக மிக சுலபமாக நாம் செய்யலாமா?


தேவையான பொருட்கள்:

பன்னீர் - 200 கிராம்
வெண்ணை - 8 டேபிள் ஸ்பூன்
வெங்காயம் - 2
இஞ்சி பூண்டு விழுது - 1 டீ ஸ்பூன்
வெள்ளை மிளகுத்தூள் - 1 டீ ஸ்பூன்
தனியாத்தூள் - 1 டீ ஸ்பூன்
சீரகத்தூள் - 1 டீ ஸ்பூன்
முந்திரிப் பருப்பு - 6
பாதாம் பருப்பு - 6
பால் - 1 கப்
குங்குமப்பூ - 1 சிட்டிகை
உப்பு - 1 டீ ஸ்பூன்

வறுத்து அரைக்க:

ஏலக்காய் - 2
கிராம்பு - 2
பட்டை - 1 சிறு துண்டு
ஷாகி ஜீரா - 1 டீ ஸ்பூன்

அலங்கரிக்க:

நெய் - 1 டீ ஸ்பூன்
உலர் திராட்சை - 1 டேபிள் ஸ்பூன்
பிரஷ் கிரீம் - 2 டேபிள் ஸ்பூன்
துருவிய சீஸ் - 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

* பாதாம் பருப்புகளை கொதிக்கும் நீரில் போட்டு 2 நிமிடம் கொதிக்கவிட்டு ஆறியதும் தோலை உரிக்கவும்.

* முந்திரிப் பருப்புகள், தோலுரித்த பாதாம் பருப்புகள் இரண்டையும் சிறிது பாலில் ஊற வைக்கவும்.

* வாணலியில் சிறிது வெண்ணையை போட்டு சிறு சதுரங்களாக நறுக்கிய பன்னீரை பொன்னிறமாக வறுத்து எடுத்துகொள்ளவும்.

* வறுத்து அரைக்க தலைப்பில் கொடுக்கப்பட்டிருக்கும் பொருட்களை வெறும் வாணலியில் மிதமான சூட்டில் வறுத்து மிக்சியில் போடவும்.

* பொடியாக அரிந்த வெங்காயத்தை வறுத்த மசாலாவுடன் மிக்சியில் போட்டு அரைக்கவும்.

* வாணலியில் மீதமுள்ள வெண்ணையை போட்டு அதில் அரைத்த மசாலா, இஞ்சி பூண்டு விழுது, வெள்ளை மிளகுத்தூள், தனியாத்தூள், சீரகத்தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.

* மேற்சொன்ன கலவை நன்கு வதங்கியவுடன் குங்குமப்பூ சேர்த்து காய்ச்சிய பாலை வதங்கும் மசாலாக் கலவையில் ஊற்றவும்.

* பாலில் ஊற வைத்த முந்திரி-பாதாம் பருப்புகளை மிக்சியில் போட்டு விழுதாக அரைக்கவும்.

* அந்த விழுதை கொதிக்கும் பாலுடன் போட்டு அடுப்பை மிதமான தீயில் வைத்து நன்கு கொதிக்க விடவும்.

* பிறகு வறுத்த பன்னீர் துண்டுகளை அதனுடன் சேர்த்து நன்கு கலந்து மேலும் ஒரு கொதிவிடவும்.

* நெய்யில் வறுத்த உலர் திராட்சை, 'பிரஷ் க்ரீம்', துருவிய சீஸ் தூவி அலங்கரித்து பரிமாறவும்.

குறிப்பு:

* கறுப்பு வண்ணத்துடன் இருக்கும் 'ஷாஹி ஜீரா' சூப்பர் மார்க்கெட்டுகளில் கிடைக்கும். 'ஷாஹி ஜீரா' கிடைக்காவிட்டால் சாதாரணமாக நாம் உபயோகிக்கும் சீரகத்தை உபயோகிக்கலாம்.

* 'பிரஷ் கிரீம்' துருவிய சீஸ் கிடைக்காவிட்டால் வீட்டில் உள்ள கடைந்த பாலேட்டைப் போட்டு அலங்கரிக்கலாம்.

வாழைக்காய் கடலைப்பருப்பு கூட்டு

வாழைக்காயில் சமையலானு கேக்குறவங்க நிறைய பேர் இருக்காங்க. அவுங்களுக்கான ஸ்பெஷல்தான் இந்த ரெசிபி. செஞ்சு சாப்பிட்டு பாருங்க... அடடே! இம்புட்டு நாளா மிஸ் பண்ணிட்டோமேனு பீல் பண்ணுவீங்க.....

தேவையான பொருட்கள்:

நாட்டு வாழைக்காய் - 5
கடலைப்பருப்பு - 150 கிராம்
மஞ்சள் தூள் - 1 டீ ஸ்பூன்
சீரகப்பொடி - 2 டீ ஸ்பூன்
தேங்காய் மூடி - 1 சிறியது
சின்ன வெங்காயம் - 4

தாளிக்க:

மிளகாய் வத்தல் - 5
கடுகுஉளுந்து - தேவையான அளவு
கருவேப்பிலை - தேவையான அளவு
சின்ன வெங்காயம் - 6
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

* கடலைப்பருப்பை இரண்டு மணிநேரத்திற்கு முன்பே ஊறவைத்துக்கொள்ளவும்.

* வாழைக்காயை தோல் சீவி பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.

* ஊறவைத்த கடலைப்பருப்பில் மஞ்சள்தூள், சீரகப்பொடியுடன் வெங்காயத்தை தட்டிப் போட்டு வேகவைக்கவும். (முக்கால் வேக்காடு வேகவைத்தால் போதும்)

* வெந்த கடலைப்பருப்பில் பொடியாக நறுக்கி வைத்த வாழைக்காய், உப்பு சேர்த்து 15 நிமிடம் வேகவைக்க வேண்டும்.

* தேங்காய் துறுவலை வழுவழுவென்று அரைக்காமல் கரகரவென்று அரைத்து சேர்க்கவும்.

* பிறகு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு கடுகுஉளுந்து, மிளகாய்வத்தல், கருவேப்பிலை, வெங்காயம் சேர்த்து தாளிக்கவும்.

* வத்தல்குழம்பு, ரசத்துக்கு பொருத்தமான சைட் டிஷ் இது.

பசியை தூண்டும் பரங்கிக்காய்

பரங்கிக்காய் குளிர்ச்சியான சுபாவம் கொண்டது. இது இனிப்பாக இருப்பதால் இதை சர்க்கரைப் பூசணி என்று சொல்கிறாம்.
பரங்கிக்காயில் வைட்டமின்கள் பி, சி ஆகிய சத்துக்கள் சிறிதளவு உண்டு. குளிர்ச்சி சுபாவம் இருப்பதால் இதை சாப்பிட்டால் உடம்பு சூடு நீங்கும். பித்தம் போக்கும். பசியை தூண்டும். சிறுநீர் பெருகும். இது வீரிய புஷ்டியை ஏற்படுத்துவதுடன் மேக நோயையும் நீக்கும் தன்மை உடையது. மூல நோய், எரிச்சல், தாகம், வயிற்றுப் பொருமல் ஆகியவற்றை குணப்படுத்தி விடும்.
ஆனால் பரங்கிக்காயை பொறுத்தவரை வேண்டாத சில குணங்களும் உண்டு. அதாவது உடலில் கெட்ட ரத்தத்தைத் தோற்றுவிக்கக் கூடியது. இது ஜீரணம் ஆவதற்கு வெகு நேரம் வரை பிடிக்கும். வாத குணம் உள்ளது. ஆனாலும் இத்தகைய விபரீத குணங்களை சரி செய்வதற்கு சுக்கும், வெந்நீரும் சாப்பிட்டால் போதும்.
பரங்கிக் கொடியின் நுனியில் காணப்படும் தளிர்களை கறி செய்து சாப்பிட்டால், வயிற்றுப் பையில் காணப்படும் பொருமல் வாய்வு, குன்மம், வறட்சி முதலிய குறைகள் நீங்கப்பெற்று நல்ல பசி உண்டாகும். பல மற்றவர்களும், நோயுற்று இளைத்தவர்களும், நோயாளிகளும் இதை சாப்பிட வேண்டாம்.
மணற்பாங்கான இடங்களில் விளையும் பரங்கிக்காய் மிகவும் சுவையாக இருப்பதுடன் கெட்டியாகவும் இருக்கும். பரங்கிக்காயின் விதைகளை உலர்த்தி எடுத்து உரித்து சாப்பிட்டு வந்தால் உடல் புஷ்டி ஆகும். நல்ல சுவையுடனும் இருக்கும்.
பரங்கிக்காயுடன் பருப்பு சேர்த்து கூட்டு மாதிரி செய்து சாப்பிடலாம். கறி செய்வதற்கும், சாம்பாரில் சேர்ப்பதற்கும்கூட இதை பயன்படுத்தலாம்.

பூசணிக்காய்

‎''புற்றுநோயை தடுக்கும் பூசணிக்காய்''

பூசணிக்காய்க்கு புற்று நோயை தடுக்கும் ஆற்றல் உள்ளது என்று ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பூசணிக்காயில் அதிக அளவு நார்சத்தும் உள்ளது. தாது உப்புக்களும் உள்ளன.பூசணிக்காய்க்கு வெண்பூசணி, கல்யாணப்பூசணி என்ற பெயரும் உள்ளது.

மலேஷியா பல்கலைக் கழகத்தின் தொழில் நுட்பத் துறை பேராசிரியை நூர் அஜியா அப்துல்அஜீஸ் பல ஆண்டுகளாக ஆய்வு மேற் கொண்டார். புற்றுநோய் தொடர்பான அவர் மேற் கொண்ட ஆய்வு முடிவுகளில் கூறப்பட்டு இருப்பதாவது:-

பூசணிக்காய்க்கு புற்று நோயை குணமாக்கும் ஆற்றல் உள்ளது. பூசணிக்காயில் ஒருவித`ஸ்டார்ச்' உள்ளது. இந்த ஸ்டார்ச்சுகள் `புரொப்பி யோனிக்' அமிலத்தை உருவாக்கும் ஆற்றல் கொண்டவை.

இந்த அமிலம் காரணமாக பூசணிக்காயில் உள்ள `ஸ்டார்ச்' புற்றுநோயை உருவாக்கும் செல்கள் பலவீனப்படுத்து கின்றன. தீமை தரும் பாக்டீரியாக்களும் அழிந்து விடுகின்றன.

பூசணிக்காயின் சதைப் பகுதியை மாவாக்கி உலர்த்தி யும் பயன்படுத்தலாம். இதன்மூலமும் புற்றுநோயை குண மாக்க முடியும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

காய்கறி வகைகளில் ஒன்றான, இதைச் சமைத்துச் சாப்பிட்டால் நரம்பைப் பற்றிய நோய்கள், நரம்புத் தளர்ச்சி, வயிற்றுப்புண் மேகவெட்டை, பிரமேக நோய் ஆகியவை உள்ளவர்களுக்கு நோயின் தீவிரம் குறையும். உடல் சூட்டைத் தணிக்கும். சிறுநீர் வியாதிகளை நீங்கும். சதா காலமும் உடல் வலி இருப்பவர்கள் பூசணிக்காயை அடிக்கடி சமைத்துச் சாப்பிட்டால் உடல்வலி தீரும். புத்தி சுவாதீனம் இல்லாதவர்களுக்கு சிகிச்சையளிக்கும் போது தினசரி பூசணிக்காய் சேர்த்து சமைத்த உணவைக் கொடுக்க புத்தி சுவாதீனம் படிப்படியாக மாறி நல்ல நிலைமைக்குத் திரும்பும்.

நூக்கல் குருமா

நார்சத்து நிறைந்த நூக்கலை பலரும் சமைப்பதே இல்லை. சிலர் சாம்பார் வைப்பதோடு சரி. ஆனால் நூக்கலை பல விதமாய் சமைக்கலாம். உருளை கிழங்கைப் போல இதுலும் வெரைட்டிஸ் செய்யலாம். நூக்கல் உடலுக்கு மிகவும் நல்லது. அஜீரணம், மலச்சிக்கல், சளி, மூச்சு கோளாறு பிரச்சினைகளை சரி செய்ய உதவும். அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

நூக்கல் - 2 சிறியது
மஞ்சள்தூள் - 1 சிட்டிகை
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு

எண்ணெயில் வதக்கி அரைக்க:

வெங்காயம் - 1
தக்காளி - 1 சிறியது
பச்சை மிளகாய் - 3
தனியாத்தூள் - 1 டீ ஸ்பூன்

அரைக்க:

தேங்காய்த் துறுவல் - 1/4 கப்
கசகசா - 1/2 டீ ஸ்பூன்
சோம்பு - 1/2 டீ ஸ்பூன்

தாளிக்க:

கிராம்பு - 3
கறிவேப்பிலை - சிறிது

செய்முறை:

* எண்ணெயில் வதக்கி அரைக்க கொடுத்துள்ள பொருட்களை அரைக்கவும்.

* தேங்காயுடன் சோம்பு-கசகசா மட்டும் வறுத்து நைசாக அரைக்கவும்.

* பாத்திரத்தில் நூக்கலை தோல் சீவி துண்டுகளாகி மஞ்சள்தூள்-உப்பு சேர்த்து வேகவிடவும்.

* காய் வெந்ததும் வெங்காயவிழுது-தேங்காய் விழுது சேர்த்து நன்கு கொதிக்க வைத்து இறக்கவும்.

* கடைசியாக தாளித்து சேர்க்கவும்.

* கமகமக்கும் நூக்கல் குருமா ரெடி.

முட்டை பொடிமாஸ்

இன்று பூரி செய்யலாமா என்று நினைப்போம். ஆனால், பூரிக்குத் தொட்டுக்கொள்ள கிழங்கைத் தவிர வேறு எதுவும் இல்லையே என்று அலுப்பும் கூடவே பின்னால் வரும். அப்படி சலிப்பாக கருதுபவர்கள் இந்த முட்டை பொடிமாஸை ட்ரை பண்ணி பார்க்கலாமே...!

தேவையான பொருட்கள்:-

பெரிய வெங்காயம் - 2
தக்காளி - 3
இஞ்சி, பூண்டு விழுது - சிறிதளவு
முட்டை - 4
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய் - தேவைக்கேற்ப
மிளகாய் தூள் - தேவைக்கேற்ப

செய்முறை:

* வெங்காயம், தக்காளியை சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.

* அடுப்பில் கடாயை வைத்து, அதில் எண்ணெய் ஊற்றவும்.

* எண்ணெய் காய்ந்தவுடன் நறுக்கி வைத்த வொங்காயத்தை அதில் போட்டு வதக்கவும்.

* வெங்காயம் லேசாக வதங்கியவுடன் தக்காளி, உப்பு, இஞ்சி, பூண்டு விழுது மற்றும் மிளகாய் தூள் சேர்க்கவும்.

* இவை நன்றாக வதங்கிய பிறகு 4 முட்டையை அதில் உடைத்து ஊற்றவும்.

* அடுப்பை சிம்மில் வைத்துவிட்டு முட்டை அடிபிடிக்காமல் தொடர்ந்து கிளறவும்.

* முட்டைய நன்றாக வெந்தவுடன், அடுப்பில் இருந்து இறக்கவும்.

* சூடான, சுவையான முட்டை கறி தயார்.

குறிப்பு: இதை பூரி மட்டுமல்ல, சப்பாத்தியுடனும் சேர்த்து சாப்பிடலாம். செம டேஸ்டாக இருக்கும், சாப்பிட்டுட்டுச் சொல்லுங்க.

சோயா பீன்ஸ்-உருளை பால்கறி



தினம் தினம் என்ன காய் வைக்குறதுனு அம்மாக்களுக்கு ஒரே டென்ஷனா இருக்கும். கத்திரிக்காய், அவரைக்காய், கேரட், முட்டைக்கோஸ்னு அதையே வைச்சாலும் சலிப்பாக இருக்குது. அதே நேரத்துல விதவிதமா வைக்கணும்னு ஆசைதான் ஆனா...என்ன வைக்குறது யோசனை அப்படித்தானே.. இதோ உங்களுக்காகவே சோயா பீன்ஸ்-உருளை பால்கறி தயாரா இருக்கு...இதை ட்ரை பண்ணிப்பாருங்க! சோயால நிறைய புரோட்டீன் இருக்கறதால இது உடம்புக்கும் ரொம்ப நல்லது.

தேவையான பொருட்கள்:

உரித்த சோயா பீன்ஸ் - 1/4 கிலோ
உருளைக்கிழங்கு - 1/4 கிலோ
தக்காளி பெரியது - 3
பூண்டு பெரிய பல் - 4

அரைக்க:

தேங்காய் சிறியது - 1
பச்சைமிளகாய் - 6
சோம்பு - 1 டீ ஸ்பூன்
கசகசா - 1 டீ ஸ்பூன்

தாளிக்க:

எண்ணெய் - தேவையான அளவு
இலவங்கப்பட்டை - சிறிதளவு
ஏலக்காய் - 1
கிராம்பு - 1
சின்ன வெங்காயம் - 50 கிராம்
கருவேப்பிலை - தேவையான அளவு

செய்முறை:

* உருளைக்கிழங்கை வேக வைத்து உரித்து நறுக்கி வைத்துக்கொள்ளவும்.

* சோயா பீன்ஸை அரை வேக்காடு வேக வைத்துக்கொள்ளவும்.

* தேங்காயை துறுவி அதோடு பச்சைமிளகாய், சோம்பு, கசகசா சேர்த்து அரைத்து வைத்துக்கொள்ளவும்.

* வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.

* பூண்டை தட்டி வைத்துக்கொள்ளவும்.

* இப்போது வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி இலவங்கப்பட்டை, ஏலக்காய், கிராம்பு, வெங்காயம், கருவேப்பிலை போட்டு தாளிக்கவும்.

* தாளித்தவுடன் நறுக்கி வைத்த தக்காளி பழத்தை சேர்த்து வதக்கவும்.

* பின்பு அரைத்து வைத்த தேங்காயை ஊற்றி பச்சை வாசனை போகும் வரை சிறிது நேரம் வதக்கவும்.

* பின்பு தேவையான தண்ணீ­ர் ஊற்றி அரை வேக்காடு வேக வைத்த பீன்ஸை சேர்த்து 10 நிமிடம் கொதிக்க விடவும்.

* அதோடு தட்டி வைத்த பூண்டை கொதிக்கும் பால்கறியில் சேர்க்கவும்.

* இப்போது நறுக்கி வைத்த உருளைக்கிழங்கை சேர்த்து 5 நிமிடம் கழித்து இறக்கவும்.

* கொத்தமல்லியை பொடிப் பொடியாக நறுக்கி இறக்கி வைத்த பால்கறியில் தூவவும்.

* கமகமக்கும் சோயா பீன்ஸ்-உருளை பால்கறி ரெடி.

* இதை சூடான சாதத்தில் சேர்த்து சாப்பிட்டால் மிகவும் சுவையுடன் இருக்கும்.

குறிப்பு: தேங்காயை நைசாக அரைக்காமலும், திப்பி திப்பியாக அரைக்காமலும் ஓரளவு நன்றாக அரைத்துக்கொள்ளவும். தேங்காய் பால் எடுத்துகூட செய்யலாம். பால் நல்ல திக்காக இருந்தால் மிகவும் நன்றாக இருக்கும்.

சப்பாத்தி


சப்பாத்தி செய்யும்போது அதில் ஏதாவது காய்கறி துருவல்கள் சேர்த்து செஞ்சு கொடுத்தா குழந்தைங்க விரும்பி சாப்பிடுவாங்கல....அதுபோல் மருத்துவ தன்மைகொண்ட சுவையான உடலுக்கு பொலிவையும், சுறுசுறுப்பைத்தரும் புதினாவையும் சேர்த்து செஞ்சு கொடுத்துப் பாருங்க..சப்பாத்தி அபார சுவையுடன் இருக்கும்...குழந்தைகளும் வெளுத்து வாங்குவாங்க....

தேவையான பொருட்கள்:

புதினா - ஒரு கட்டு
கோதுமை மாவு - ஒரு கப்
சோளமாவு - ஒரு பங்கு
இஞ்சி - சிறிதளவு
பூண்டு - 10 பல்
மிளகாய் தூள் - 2 டீ ஸ்பூன்
தயிர் - 1/2 கப்
வெல்லம் - 2 டேபிள் ஸ்பூன்
சோம்பு - 1 டீ ஸ்பூன்
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

* புதினாவை சுத்தம் செய்து பொடியாக நறுக்கவும்.

* இஞ்சி-பூண்டு ஆகியவற்றுடன் சிறிது உப்பு சேர்த்து அரைக்கவும்.

* மாவுடன் தயிர், வெல்லம், எண்ணெய், புதினா, இஞ்சி-பூண்டு விழுது, மிளகாய்தூள், சீரகம் ஆகியவற்றை சேர்த்து பிசைந்து 2மணிநேரம் ஊறவைக்கவும்.

* சிறு சிறு உருண்டைகளாக எடுத்து சப்பாத்தி தேய்த்து சுட்டெடுக்கவும்.

பூண்டு


கைவைத்தியத்துக்கு சிறந்தது பூண்டு. அதன் மருத்துவக்குணங்களைப் பற்றி நிறைய தெரிந்து வைத்திருந்தாலும், நாம் அதை எளிதில் மறந்து விடுவோம். அதனால்தான் என்னவோ நம் முன்னோர்கள் சமையலில் பூண்டை அதிகம் பயன்படுத்த நம்மை பழக்கப்படுத்திவிட்டனர். அன்றாட உணவில் பூண்டை சேர்ப்பதன் மூலம் நமக்கு கிடைக்கும் நன்மைகளில் சில.......

* குழந்தை பெற்ற பெண்களுக்கு தினந்தோறும் இரவில் பாலில் பூண்டு போட்டு காய்ச்சிக் கொடுத்தால் தாய்ப்பால் பெருகுவதுடன் வயிற்று உப்புசம், பொருமல் எதுவும் வராது.

* கர்ப்பப் பையில் சேர்ந்துள்ள அழுக்கை அகற்றும் தன்மை பூண்டிற்கு உண்டு.

* தசைவலி இருக்கும் இடத்தில் பூண்டை நசுக்கி வைத்துக் கட்டினால் வலி சீக்கிரம் குறையும்.

* உடம்பில் கொழுப்பு சேரவிடாமல் தடுக்கும் ஆற்றல் பூண்டுக்கு உண்டு. ஆகையால்தான் கரையாத கொழுப்பு சத்து உள்ள மாமிச உணவு சமைக்கும்போது பூண்டை அவசியம் சேர்க்கின்றனர்.

* இரவு உணவுடன் பச்சையாகவோ அல்லது பாலிலோ மூன்று பூண்டு பற்களை சாப்பிட்டால் ஆழ்ந்த உறக்கம் ஏற்படும். கனவுத் தொல்லை இருக்காது.

* பூண்டிற்கு ரத்த அழுத்தத்தைக் கண்டிக்கும் சக்தி உண்டு. அதனோடு இதய தசைகளையும் ரத்தக் குழாய் தசைகளையும் வலுப்படுத்தும் சக்தி பூண்டிற்கு உண்டு.

* பூண்டு ஒரு நார்சத்து மிகுந்த உணவு என்பதால் மலச்சிக்கலை அகற்றும் குணம் பூண்டிற்கு உண்டு.

* பூண்டை உணவில் சேர்த்துக்கொள்ளும் வாய்ப்பு இல்லாதவர்கள் பூண்டு மாத்திரைகளை சாப்பிடலாம். இதனால் வயிற்று உப்பிசம் நீங்கி, தொப்பை குறையும் வாய்ப்பு அதிகம்.


தேங்காய் பால் வெஜ் பிரியாணி


வெஜ் பிரியாணி சதாரணமா செஞ்சாலே ருசியா இருக்கும். தேங்காய் பால் எடுத்து சமைச்சா சொல்லவா வேணும். சுவையும் மணமும் கொஞ்சம் தூக்கலாவே இருக்கும். சத்தானதும் கூட. சுடச்சுட சாப்பிடுவதை விட லேசா ஆறிய பின் சாப்பிட்டா சுவை கூடின வித்தியாசத்தை நன்றாக உணர முடியும்.

தேவையான பொருட்கள்:

பிரியாணி அரிசி - 1 டம்ளர்
பீன்ஸ், கேரட், காலி பிளவர், பச்சைப் பட்டாணி, உருளைக் கிழங்கு, நூல்கோல் எல்லாம் சேர்த்து நறுக்கிய துண்டங்கள் - 3 டம்ளர்
நெய - 2 டேபிள் ஸ்பூன்
பெரிய வெங்காயம் - 2
முந்திரிப் பருப்பு - 20
கிராம்பு - 6
லவங்கப்பட்டை - 6
ஏலக்காய - 6
வெள்ளைப் பூண்டு உரித்தது - 10 பல்லு
பெரிய தேங்காய - 1/2 மூடி
உப்பு - 2 டீ ஸ்பூன்
பச்சை மிளகாய் - 2

செய்முறை:

* முதலில் காய்கறிகளைச் சிறிய துண்டுகளாக நறுக்கி திட்டமாகத் தண்ணீ­ர் வைத்து வேகவைத்துக்கொள்ள வேண்டும்.

* தேங்காயைத் துருவிப் பால் எடுத்துக்கொள்ள வேண்டும்.

* கிராம்பு, பட்டை, ஏலக்காய் முதலியவைகளை அம்மியில் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.

* வெங்காயம், பச்சை மிளகாயை நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும்.

* கனமான வெங்கல உருளி அல்லது ஈயம் பூசிய பித்தளைப் பாத்திரத்தில் நெய்யை வைத்துக் காய்ந்தவுடன், முந்திரிப் பருப்பையும் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு முதலியவைகளையும் போட்டுச் சிவப்பாக வறுபட்ட உடன் அம்மியில் வைத்துத் தட்டிய பொடியையும் போட்டு தேங்காய்ப் பாலும் தண்­ணீருமாகச் சேர்த்து 2 1/2 டம்ளர் விட்டு, கொதிக்கும்பொழுது அரிசியைக் கழுவிப் போட வேண்டும்.

* தீயைக் குறைத்து நிதானமாக எரியவிட வேண்டும்.

* அரிசி நன்றாக வெந்த பிறகு உப்பு, வெந்த காய்கறிகளையெல்லாம் போட்டுக் கிளறி இறக்கி வைக்க வேண்டும்.

* இதுக்கு வெங்காயத் தயிர் பச்சடி நன்கு பொருத்தமாக இருக்கும்.

கறிவேப்பிலை சாதம்

ஒரேமாதிரியான சாப்பாட்டை சாப்பிட்டு சாப்பிட்டு போரடிக்குதா...இதோ ஒங்களுக்காகதான் இந்த கறிவேப்பிலை சாதம்! கறிவேப்பிலையில் நிறைய இரும்புச்சத்து இருப்பதால் உடலுக்கு ரொம்ப நல்லது. கறிவேப்பிலையை உணவில் நிறைய சேர்த்துக்கொண்டால் தலைமுடி நன்கு கருகருவென்று வளரும்... கறிவேப்பிலையை தனியாக சாப்பிட முடியலையென்றால் அடிக்கடி கறிவேப்பிலை சாதம் செஞ்சு சாப்பிடுங்க.... சுவையுடன் நல்ல பலனும் கிடைக்கும்!

தேவையான பொருட்கள்:

சாதம் - 2 கப்
கறிவேப்பிலை - ஒரு கப்
நல்லெண்ணை - 1 டீ ஸ்பூன்
கடலைப்பருப்பு - 1/2 டீ ஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1/2 டீ ஸ்பூன்
கடுகு - 1/2 டீ ஸ்பூன்
பெரிய வெங்காயம் - 1
மிளகுத்தூள் - 1/2 டீ ஸ்பூன்
வர மிளகாய் - 3
பெருங்காயம் - 1 சிட்டிகை
முந்திரி - 5
எலுமிச்சை - 1/4 பழம்
நெய் - 1 டீ ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

* சிறிதளவு நெய்யில் கறிவேப்பிலையை மொறுகலாக வறுத்து, மைய பொடித்துக்கொள்ளவும்.

* பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.

* அரிசியை சாதமாக வடித்து உதிரி உதிரியாக ஒரு அகன்ற பாத்திரத்தில் வைக்கவும்.

* அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு போட்டு வெடித்ததும், கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு போட்டு சிவந்ததும், வர மிளகாய், ஒரு கொத்து கறிவேப்பிலைப் போட்டு தாளிக்கவும்.

* பிறகு நறுக்கிய வெங்காயம் பெருங்காயத்தூள் சேர்த்து சிவக்க வதக்கவும்.

* பிறகு பொடித்த கறிவேப்பிலையைப் போட்டு, உப்பு சேர்த்து வதக்கவும்.

* அதனுடன் எலுமிச்சம்பழத்தை பிழிந்து சேர்க்கவும்.

* பின்னர் அதனுடன் மிளகுத்தூள், நெய்யில் வறுத்த முந்திரியை சேர்த்து கிளறவும்.

* பிறகு ஆற வைத்த உதிரியாக உள்ள சாதத்தைச் சேர்த்து சாதம் குழையாமல் நன்றாகக் கிளறி அடுப்பிலிருந்து இறக்கி பரிமாறவும்.

குறிப்பு:

* இதில் சிறிது இஞ்சி துருவலைச் சேர்த்து வதக்கினால் இன்னும் வாசனையாக இருக்கும்.

* முந்திரிக்குப் பதிலாக, வறுத்த நிலக்கடலை, வறுத்த பொட்டுக்கடலை போன்றவையும் சேர்க்கலாம்.

ஆட்டு எலும்பு சூப்

ஆட்டு எலும்பு கால் கிலோ
வெங்காயம் இரண்டு
மஞ்சள்பொடி ஒரு தேக்கரண்டி
மிளகு ஒரு தேக்கரண்டி
எண்ணெய் ஒரு மேசைக்கரண்டி
கிராம்பு 6
பட்டை இரண்டு துண்டுகள்
கறிவேப்பிலை சிறிது
உப்பு தேவையான அளவு

• ஆட்டு எலும்பினை நன்கு கழுவி சுத்தம் செய்து கொள்ளவும். பிறகு அதனை ஒரு பாத்திரத்தில் இட்டு அரை லிட்டர் அளவிற்கு தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து கொதிக்க விடவும்.
• நறுக்கிய வெங்காயம், உடைத்த மிளகு, மஞ்சள்பொடி ஆகியவற்றையும் அந்த தண்ணீரில் போட்டு கொதிக்கவிடவும்.
• தண்ணீர் நன்கு கொதித்தவுடன், எலும்பில் உள்ள சாறு நீரில் இறங்கி எண்ணெய் போல் மிதக்கும். இந்த நேரத்தில் பாத்திரத்தை இறக்கிவிட்டு, ஒரு வாணலியை வைத்து அதில் சிறிது எண்ணெய் ஊற்றி காயவிடவும்.
• எண்ணெய் காய்ந்ததும் பட்டை, கிராம்பு ஆகியவற்றை தட்டிப் போடவும். அவை சிவந்து வந்தவுடன் கறிவேப்பிலையை அதில் போட்டுத் தாளிக்கவும்.
• பிறகு எலும்பு நீரை அதில் ஊற்றி, தேவையான அளவு உப்பையும் சேர்த்து கிளறி சிறிது நேரம் மூடி வைத்துவிட வேண்டும்.
• சற்று கொதித்தவுடன் இறக்கி சூடாய் அருந்தவும்.