Monday, August 1, 2011

மூன்று பிரிவு உணவு

ஒவ்வொரு வேளை சாப்பாட்டிலும் மூன்று பிரிவு உணவுகளையும் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
எல்லா உணவுகளையும் அதன் முதன்மையான செயல்பாட்டை அடிப்படையாக வைத்து மூன்று பிரிவுகளாக வகைப்படுத்தலாம்.
அதாவது சக்தி தரும் உணவுகள், உடல் வளர்க்கும் உணவுகள், உடலைப் பாதுகாக்கும் உணவுகள்.
உணவானது ஊட்டச்சத்து மிகுந்ததாக இருக்க உணவில் இந்த மூன்று பிரிவுகளிலிருந்தும் ஒன்று அல்லது இரண்டு வகை உணவுகளைச் சாப்பாட்டில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்புகள் அடங்கிய உணவுகள் சக்தி தரும் உணவுகளாகும். காம்ப்ளெக்ஸ் கார்போஹைட்ரேட்ஸ்கள் முழு தானியங்கள், முழு பருப்புகள், ஸ்டார்ச் நிறைந்த காய்கறிகள் போன்ற உணவுகளில் கிடைக்கும். சிம்பிள் கார்போஹைட்ரேட்ஸ் சர்க்கரை வள்ளிக்கிழங்கு, வாழைப்பழம் போன்றவற்றில் கிடைக்கும். கொழுப்புகளுக்கான ஆதாரம் தாவர எண்ணெய்கள், நெய், வெண்ணெய் ஆகும். கொழுப்பையும், எண்ணெய்களையும் மிதமான அளவில் தான் எடுத்துக்கொள்ள வேண்டும். இவற்றை உணவுப் பொருட்களில் அதிக அளவு சேர்ப்பதைத் தவிர்க்க வேண்டும்.
புரதங்கள் அதிகம் நிறைந்த பருப்புகள், முட்டை, சிக்கன், மீன், போன்ற விலங்கு உணவுகள், பால் மற்றும் பால் பொருட்கள் போன்றவை உடலை வளர்க்கும் உணவுகளாகும். இவை தசை அடுக்குகள், உறுப்புகள், திசுக்கள், போன்றவற்றை கட்டமைப்பதுடன் பழுதடைந்த திசுக்களை சீர் செய்ய உதவுகிறது. இவை உடல் நலிவுறுவதைத் தடுப்பதுடன் நமது எதிர்ப்பு சக்தியையும் வலுவாக்குகிறது. அதனால் புரதங்கள் வயதான காலத்திலும் தேவைப்படும் உணவாகிறது.
மினரல்கள், விட்டமின்கள் அதிகம் நிறைந்த உணவுகள் உடலைப் பாதுகாக்கும் உணவுகள். இவை உடம்பை நோய்த் தொற்றுகளிலிருந்து பாதுகாப்பதுடன் எதிர்ப்புச் சக்தியையும் வலுப்படுத்துகிறது.
இத்தகைய உணவுகள் ரத்த சோகை ஏற்படுவதைத் தடுக்கின்றன. சிதைவு நோய்கள் ஏற்படுவதை தடுக்கின்றன / விரைவில் வராமல் தாமதப்படுத்துகின்றன. பழங்கள் மற்றும் காய்கறிகளில் இத்தகைய பாதுகாக்கும் ஊட்டச்சத்துகளும், ஆன்டி ஆக்ஸிடண்ட்களும் அதிக அளவில் உள்ளன.
நாம் உண்ணும் ஒவ்வொரு வேளை உணவிலும் இந்த மூன்று வகை உணவுகளிலிருந்து ஒன்று அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட உணவுகள் இருக்க வேண்டும். இதற்காகப் பல தரப்பட்ட பதார்த்தங்களைச் செய்தாக வேண்டும் என்பதில்லை. ஒரே ஒரு பதார்த்தத்தில் கூட இந்த மூன்று வகை உணவுகளையும் இடம் பெறச் செய்துவிடலாம் (உ.ம்) காய்கறிகள் நிறைந்த கிச்சடி, வெஜிடேபிள் உப்புமா மற்றும் மிஸ்ஸி ரொட்டி.

No comments: