Thursday, August 11, 2011

மீன் குழம்பு

தேவையான பொருட்கள்:
வசதிக்கேற்ப  மீன் – கால் கிலோ
மிளகாய்த் தூள் – 4 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்
நாட்டுத் தக்காளி – 100 கிராம் (பொடியாக வெட்டவும்)
சின்ன வெங்காயம் – 100 கிராம் (பொடியாக வெட்டவும்)
பூண்டு – 10 பல் (பொடியாக வெட்டவும்)
புளி – 50 கிராம்
கடுகு, வெந்தயம், சீரகம் – தலா அரை டீஸ்பூன்
எண்ணெய் – 100 கிராம்
உப்பு – தேவையான அளவு
கறிவேப்பிலை, கொத்தமல்லி – தேவையான அளவு
பச்சை மிளகாய் – 3, நீளமாக வெட்டவும்


செய்முறை:

கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்த பிறகு கடுகு, வெந்தயம், சீரகம் போட்டு தாளிக்கவும். பிறகு பச்சை மிளகாய், வெங்காயம், பூண்டு, தக்காளி சேர்த்து நன்றாக வதக்கி மிளகாய்த்தூள், மஞ்சள் தூள் சேர்த்து உப்பு போட்டு வதக்கி சுருண்டு வந்த பிறகு புளியை கரைத்து ஊற்றி, நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். பிறகு மீனைப் போட்டு நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். தீயை குறைக்கக் கூடாது. பெரிய தீயில் கொதிக்கவிடவும். அப்பொழுதுதான் மீனில் உப்பு-காரம் ஏறும். குழம்பு கொதிக்கும் பொழுது கொத்தமல்லி, கறிவேப்பிலை போட்டு குழம்பு சுண்டி வந்த பிறகு இறக்கவும். இந்த குழம்பு படுகாரமாக இருக்கும். கவுச்சி நாற்றம் இருக்காது.

குறிப்பு: இந்த குழம்புக்கு மூடியை நடுவில் திறக்கலாம். ஏன் என்றால் மிளகாய்த்தூள் எண்ணெயில் வதக்குவதால் பச்சைவாடை வராது. மீன், புளி கரைசலையும் ஒன்றாகத்தான் போட வேண்டும்.

Monday, August 1, 2011

மூன்று பிரிவு உணவு

ஒவ்வொரு வேளை சாப்பாட்டிலும் மூன்று பிரிவு உணவுகளையும் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
எல்லா உணவுகளையும் அதன் முதன்மையான செயல்பாட்டை அடிப்படையாக வைத்து மூன்று பிரிவுகளாக வகைப்படுத்தலாம்.
அதாவது சக்தி தரும் உணவுகள், உடல் வளர்க்கும் உணவுகள், உடலைப் பாதுகாக்கும் உணவுகள்.
உணவானது ஊட்டச்சத்து மிகுந்ததாக இருக்க உணவில் இந்த மூன்று பிரிவுகளிலிருந்தும் ஒன்று அல்லது இரண்டு வகை உணவுகளைச் சாப்பாட்டில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்புகள் அடங்கிய உணவுகள் சக்தி தரும் உணவுகளாகும். காம்ப்ளெக்ஸ் கார்போஹைட்ரேட்ஸ்கள் முழு தானியங்கள், முழு பருப்புகள், ஸ்டார்ச் நிறைந்த காய்கறிகள் போன்ற உணவுகளில் கிடைக்கும். சிம்பிள் கார்போஹைட்ரேட்ஸ் சர்க்கரை வள்ளிக்கிழங்கு, வாழைப்பழம் போன்றவற்றில் கிடைக்கும். கொழுப்புகளுக்கான ஆதாரம் தாவர எண்ணெய்கள், நெய், வெண்ணெய் ஆகும். கொழுப்பையும், எண்ணெய்களையும் மிதமான அளவில் தான் எடுத்துக்கொள்ள வேண்டும். இவற்றை உணவுப் பொருட்களில் அதிக அளவு சேர்ப்பதைத் தவிர்க்க வேண்டும்.
புரதங்கள் அதிகம் நிறைந்த பருப்புகள், முட்டை, சிக்கன், மீன், போன்ற விலங்கு உணவுகள், பால் மற்றும் பால் பொருட்கள் போன்றவை உடலை வளர்க்கும் உணவுகளாகும். இவை தசை அடுக்குகள், உறுப்புகள், திசுக்கள், போன்றவற்றை கட்டமைப்பதுடன் பழுதடைந்த திசுக்களை சீர் செய்ய உதவுகிறது. இவை உடல் நலிவுறுவதைத் தடுப்பதுடன் நமது எதிர்ப்பு சக்தியையும் வலுவாக்குகிறது. அதனால் புரதங்கள் வயதான காலத்திலும் தேவைப்படும் உணவாகிறது.
மினரல்கள், விட்டமின்கள் அதிகம் நிறைந்த உணவுகள் உடலைப் பாதுகாக்கும் உணவுகள். இவை உடம்பை நோய்த் தொற்றுகளிலிருந்து பாதுகாப்பதுடன் எதிர்ப்புச் சக்தியையும் வலுப்படுத்துகிறது.
இத்தகைய உணவுகள் ரத்த சோகை ஏற்படுவதைத் தடுக்கின்றன. சிதைவு நோய்கள் ஏற்படுவதை தடுக்கின்றன / விரைவில் வராமல் தாமதப்படுத்துகின்றன. பழங்கள் மற்றும் காய்கறிகளில் இத்தகைய பாதுகாக்கும் ஊட்டச்சத்துகளும், ஆன்டி ஆக்ஸிடண்ட்களும் அதிக அளவில் உள்ளன.
நாம் உண்ணும் ஒவ்வொரு வேளை உணவிலும் இந்த மூன்று வகை உணவுகளிலிருந்து ஒன்று அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட உணவுகள் இருக்க வேண்டும். இதற்காகப் பல தரப்பட்ட பதார்த்தங்களைச் செய்தாக வேண்டும் என்பதில்லை. ஒரே ஒரு பதார்த்தத்தில் கூட இந்த மூன்று வகை உணவுகளையும் இடம் பெறச் செய்துவிடலாம் (உ.ம்) காய்கறிகள் நிறைந்த கிச்சடி, வெஜிடேபிள் உப்புமா மற்றும் மிஸ்ஸி ரொட்டி.

உடனடி சமையல் ரொட்டி உப்புமா

தேவையான பொருட்கள் :

ரொட்டி உதிர்த்தது – 1
பச்சை பட்டாணி – 1 மேஜைக்கரண்டி
காரட் – 1 தீக்குச்சிகளாக வெட்டியது
பெல்லாரி – 1
தக்காளி – 1
தாளிக்க:
கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை, நறுக்கிய மிளகாய் 2 உப்பு, மல்லித் தழை (நறுக்கியது)

செய்முறை:

வாணலியில் எண்ணெயை விட்டு தாளிதம் செய்யவும். நறுக்கிய காய்கறிகளையும் சேர்த்து வதக்கி சிறு தீயின் தன் தண்ணீரில் வேக விடவும். தேவையான உப்பை சிறிது நீரில் கலந்து ரொட்டித் துண்டுகளுடன் புட்டு மாவுக்கு விரவுவது போல் விரவி வாணலியில் கொட்டி காய்கறிகளுடன் ஒன்று சேரக் கிளறி மல்லித் தழையைத் தூவி கீழே இறக்கவும்.

தயிர் உருளை

பேபி பொட்டேடோஸ் பிடிக்காதவங்க யாராச்சும் இருப்பாங்களா..? தயிரோட சேர்ந்த உருளைகிழங்கு மசாலாவா.. சொல்லவே வேண்டாம் எக்ஸ்ட்ரா இரண்டு பூரியோ, சப்பாத்தியோ சொல்லாமலே உள்ளே போகும். ஒங்க வீட்டு குட்டீஸ்களுக்கும் ரொம்ப பிடிக்கும். செஞ்சு குடுங்க... அடம் பண்ணாம சாப்பிடுவாங்க!

தேவையான பொருட்கள்:

சிறிய உருளை கிழங்கு - 1/2 கிலோ
பெரிய வெங்காயம் - 2
சற்று புளித்த தயிர் - 1/2 கப்
இஞ்சி-பூண்டு விழுது - 2 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் - 1/2 டேபிள் ஸ்பூன்
மிளகு தூள் - 1/2 டேபிள் ஸ்பூன்
கரம் மசாலா - 1/2 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

* உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் உரித்துகொள்ளுங்கள்.

* வெங்காயத்தை பொடி பொடியாக நறுக்கவும்.

* எண்ணெய் காய வைத்து வெங்காயத்தை போட்டு நன்கு வதக்கவும்.

* பின்பு மிளகாய் தூள், மஞ்சள் தூள், மிளகு தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.

* பின்னர் உருளைக்கிழங்கு சேர்த்து 10 நிமிடம் சிறு தீயில் வைத்து வதக்கவும்.

* பின்னர் கரம் மசாலா, தயிர் சேர்த்து சுருள கிளறி இறங்குங்கள்.

* பிரட், பூரி, சப்பாத்திக்கு சூப்பர் சைடு டிஷ் இது.

தோசை

தேவையான பொருள்கள்:-
புழுங்கல் அரிசி – 1/2 லிட்டர்
பச்சரிசி – 1/2 லிட்டர்
உளுந்து – 1/4 லிட்டர்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – கொஞ்சம்

செய்முறை:-
முதல் நாள் மாலையில் புழுங்கல் அரிசி, பச்சரிசி, உளுந்தம் பருப்பு ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து, ஊற வைக்கவும்.
உப்புப் போட்டு, கிரைண்டரில் ஆட்டிக் கொள்ளவும்.
அடுத்த நாள் காலை மாவு நன்றாகக் புளித்திருக்கும்.
மாவில் அளவாகத் தண்ணீர் விட்டுக் கரைத்துக் கொள்ளவும்.
அடுப்பில் தோசைக் கல்லை வைத்து, எண்ணெய் தோய்த்த ஒரு துணியினால் கல்லைத் துடைத்து விட்டு, ஒரு கரண்டியில் மாவை எடுத்து ஊற்றி வட்டமாகப் பரப்பி விடுங்கள்.
ஒரு புறம் வெந்ததும், தோசைக் கரண்டியால் திருப்பிப் போட்டு, சுற்றிலும் சிறிது எண்ணெய் ஊற்றி, தோசை நன்றாக வெந்ததும், எடுத்துத் தட்டில் போடவும்.
சுடச் சுட சாம்பார் ஊற்றியோ, சட்னி தொட்டுக் கொண்டோ அல்லது இரண்டும் வைத்துக் கொண்டோ தோசையை ஆசையோடு சாப்பிடுங்கள்.

ரவா கேசரி

ரவா கேசரி அனைவருக்கும் தெரிந்த மிக எளிதில் செய்யக்கூடிய மிகவும் சுவையான இனிப்பு,விலையுயர்ந்த இனிப்புகள் எத்தனை வந்தாலும் இதற்கு இணை வேறு எதுவும் இல்லை.

தேவையான பொருட்கள் :

ரவா       -   100 கிராம்
சர்க்கரை   -   150 கிராம் (தேவைக்கு)
நெய்       -   50 கிராம் (தேவைக்கு)
முந்திரி    -   5
திராட்சை   -  5
ஏலக்காய்    – 5
கேசரி பவுடர் – தேவைக்கு
தண்ணிர்     – 3 டம்ளர்
செய்முறை :

ஒரு பாத்திரத்தில் ரவையை போட்டு நன்கு பொன்னிரமாக வறுத்துக் கொள்ளவும். நொய்யில் முந்திரி, திராட்சை, ஏலக்காய் போட்டு வறுத்துக் கொள்ளவும்.
வேறு ஒரு பாத்திரத்தில் தண்ணிரை ஊற்றி அத்துடன் கேசரி பவுடரையும் சேர்த்து நான்கு கொதிக்கவைக்கவும்
கொதித்த தண்ணிரில் ரவையை சேர்த்து நன்கு கிளறி விடவும், ரவை நன்கு வெந்ததும் சர்க்கரையை சேர்த்து கிளறிக் கொண்டே இருக்கவும்.

அதனுடன் நெய்யை சேர்த்து நன்கு கிளறி, வறுத்த முந்திரி, திராட்சை, ஏலக்காய் போட்டு இறக்கினால் சுவையான ரவா கேசரி ரெடி.  

விருப்பட்டால் : அண்ணாச்சி பழ துண்டுகள் , கறுப்பு திராட்சை பழம் நெய்யில் வதக்கி சேர்கலாம் .

பனீர் வெஜிடபிள் பிரியாணி

பனீரில் உள்ள புரதச்சத்து அனைத்து வயதினருக்கும் மிகவும் நல்லது. சுவையுள்ளதும் கூட. பன்னீரை விதவிதமாய் சமைத்து சாப்பிட்டிருப்போம்.. ஆனா, பிரியாணி செய்து சாப்பிட்டிருக்கீங்களா? செஞ்சு பாருங்க..சூப்பரா இருக்கும்! சுவையும் மணமும் நிறைந்துள்ளதால் சைவ விருந்தாளிகளுக்கும் மிகவும் ஸ்பெஷலான ஒரு டிஷ் செய்து கொடுத்த சந்தோஷம் நிலவும்...

தேவையான பொருட்கள்:

பாசுமதி அரிசி - 1 கப்
கெட்டித் தயிர் - 1 கப்
நெய் - 6 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீ ஸ்பூன்
பிரிஞ்சி இலை - 4
பனீர் - 100 கிராம்
உப்பு - 11/2 டீ ஸ்பூன்
வெங்காயம் - 2
இஞ்சி விழுது - 1/2 டீ ஸ்பூன்
பூண்டு - 4 பற்கள்
தக்காளி - 2
பீன்ஸ் - 8
கேரட் - 1
காலிபிளவர் - 8 சிறிய பூக்கள்
நூல்கோல் - 1

வறுத்து அரைக்க:

கிராம்பு - 2
பட்டை - 1 சிறிய துண்டு
சோம்பு - 1 டீ ஸ்பூன்
சீரகம் - 1 டீ ஸ்பூன்
தேங்காயத் துருவல் - 6 டேபிள் ஸ்பூன்
கசகசா - 1 டீ ஸ்பூன்
மிளகாய் வற்றல் - 4
பச்சை மிளகாய் - 2

செய்முறை:

* பாசுமதி அரிசியைக் களைந்து 1 கப் தண்­ணீரில் ஊற வைக்கவும்.

* சிறிது நெய்யில் அரைக்க கொடுக்கப்பட்டிருக்கும் பொருட்கள் (தேங்காய்த்துருவல் நீங்கலாக) வறுத்து அதனுடன் தேங்காய் துருவல், சிறிது தண்ணீ­ர் சேர்த்து மிக்சியில் போட்டு மசிய அரைத்துக் கொள்ளவும்.

* ஒரு குக்கரில் மீதியுள்ள நெய் ஊற்றி பொடியாக அரிந்த வெங்காயம், தக்காளி, இஞ்சி, விழுது, பூண்டு, பிரிஞ்சி ஆகியவை அரைத்த விழுதுடன் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு சுருள வதக்கவும்.

* வதக்கிய கலவை நன்கு நெய்யை விட்டுப் பிரிந்தவுடன் பொடியாக நறுக்கிய காய்கள், காலிபிளவர் பூக்கள், சிறு துண்டுகளாக நறுக்கிய பனீர் சேர்த்து சிறிது வதக்கவும்.

* தண்­ணீருடன் ஊறிய பாசுமதி அரிசி, தயிர், உப்பு சேர்த்து நன்கு கலந்து குக்கரை மூடி 2 விசில் விட்டு சிம்மில் 5 நிமிடம் வைத்து அணைக்கவும்.

குறிப்பு: பச்சைப் பட்டாணி, குடமிளகாய் போன்ற காய்களையும் கூடுதலாக சேர்த்து பிரியாணியின் ஆரோக்கிய சுவையைக் கூட்டலாம். நெய்க்கு பதிலாக எண்ணையும் உபயோகிக்கலாம்.