Friday, August 12, 2011

மாங்காய்

என்ன இருக்கு: நார்ச்சத்து, விட்டமின் ஏ....

யாருக்கு வேண்டாம்: சரும நோய்,வயிற்றுவலி உள்ளவர்கள் சாப்பிடக்கூடாது.சூட்டைக் கிளப்பும்.
பலன்கள்: மாங்காய் சாப்பிட்டால் மலக்குடல் புற்றுநோய் வராமல் தடுக்கும். தாது பலம் பெறும். செரிமாணத்தைத் தூண்டி மலக்குடலைச் சுத்தம் செய்யும். பசியைத் தூண்டும்.

ரவை வடை

தேவையான பொருட்கள் :
  ரவை : 500 கிராம்
  வெங்காயம் : இரண்டு
  கேரட்  : இரண்டு
  பச்சை மிளகாய் : காரத்திற்கு ஏற்ப
  உப்பு  : தேவைக்கேற்ப
  கறிவேப்பிலை : இரண்டு இனுக்கு
  புதினா  : நான்கு இனுக்கு
  எண்ணெய் : தேவையான அளவு

செய்முறை :
 ரவையை வாணலில் இட்டு சிறு பொன்னிறமாக வரும் வரை வறுத்து எடுத்து கொள்ளவும் , வெங்காயம் சிறிசிறு துண்டுகளாக வெட்டி கொள்ளவும் , கேரட்டை சிவலில் துருவி கொள்ளவும் , பச்சை மிளகாயை சிறிசிறு துண்டுகளாக வெட்டி கொள்ளவும் , கறிவேப்பிலை புதினா சிறு துண்டுகளாக வெட்டி கொள்ளவும் ,

ஒரு பாத்திரத்தில் வறுத்த ரவையுடன் வெங்காயம் , கேரட் , பச்சை மிளகாய் , கறிவேப்பிலை , புதினா , உப்பு சேர்த்து நீர் விசிறி வடை மாவு பதத்திற்கு பிசையவும் இதனை 20  நிமிடம் உறவிடவும் , பின்பு வாணலில் எண்ணெய் சூடாக்கி விட்டு வடை தட்டி எண்ணெயில் இடவும் , இப்போது சுவையான ரவை வடை தயார் .

தவிர்க்க கூடாத பத்து உணவு பொருட்கள்

தவிர்க்க கூடாத பத்து உணவுகள்   நம் உடல் பாதுகாப்பாக இயங்கப் பத்து சூப்பர் உணவுகள் உள்ளன. காற்று, நீர் மூலம் பரவும் நோய்த் தொற்றைப் படுசுத்தமான மனிதர் கூடத் தடுக்க முடியாது. நாம் சாப்பிடும் முக்கியமான உணவு வகைகள், நம் உடலில் சேரும் இத்தகைய நோய் நுண்மங...்களை எளிதில் தடுத்து அழித்துவிடும். நோய் பரவுவதைத் தடுக்கும் அந்தப் பத்து சூப்பர் உணவுகள்.


1.வெள்ளைப் பூண்டு: பண்டைய எகிப்திலும் பாபிலோனியாவிலும் அற்புதங்களை விளைவித்துக் குணமாக்கிய மண்ணடித் தாவரம் இது. கிரேக்கத் தடகள வீரர்கள் விரைந்து ஓட ஊக்கம் தரும் மருந்தாக வெள்ளைப் பூண்டை கைகளில் அழுத்தித் தடவிக் கைகளைக் கழுவினார்கள். இதனால் நோய் நுண்மங்கள் அழிந்தன. குடலில் உள்ள புழுக்களிலிருந்து மற்றும் தலைவலி முதல் புற்றுநோய் வரை பல நோய்களையும் குணமாக்க வெள்ளைப் பூண்டு பயன்படுத்தப்படுகிறது. அறிவியல் முடிவுகளால் கூட வெள்ளைப் பூண்டு பயன்படுத்தப்படுகிறது. அறிவியல் முடிவுகளால் கூட வெள்ளைப் பூண்டின் பெருமையை மங்கச் செய்ய முடியவில்லை. உடலில் நன்மை செய்யக்கூடிய கொலாஸ்டிரல் உருவாக பூண்டின் பங்கு மகத்தானது. 


2.வெங்காயம்: வெள்ளைப் பூண்டுடன் சேர்ந்து வல்லமை மிக்க, புகழ்மிக்க மருந்தாக வெங்காயம் செயல்பட்டு வருகிறது. ஜலதோஷத்தை ஏற்படுத்தும் நச்சு நுண்மங்களையும், புற்று நோய்களையும், இதய நோய்களையும் தடுத்து நிறுத்துகிறது. நோய்த் தொற்றைத் தடுத்து உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது. வெங்காயத்தில் உள்ள அலிலின் என்ற இராசயனப் பொருள்தான் பாக்டீரியாக்கள், நச்சு நுண்மங்கள், காளான் போன்றவை உடலில் சேராமல் தடுக்கின்றன. இத்துடன் புற்றுநோய்க் கட்டிகள் வளராமலும் தடுக்கின்றன. 


3.காரட்: நோய் எதிர்ப்புச் சக்தி வேலிகள் நன்கு உறுதிப்பட காரட்டில் உள்ள பீட்டா கரோட்டின் உதவுகிறது. குறிப்பாக நம் உடல் தோலிலும், சளிச் சவ்விலும் நோய் எதிர்ப்புப் சக்திகள் நன்கு செயல்படும்படி தூண்டிக்கொண்டே இருப்பது காரட்தான்

4.ஆரஞ்சு : வைட்டமின் சி ஒரு முகப்படுத்தப்பட்டு சேகரித்து வைக்கப்பட்டுள்ளது. இப்பழத்தில் இன்டர்பெரான் என்ற இராசயனத் தூதுவர்களை அதிகம் உற்பத்தி செய்வது வைட்டமின் சி. காற்று மற்றும் நீர் மூலம் பரவும் நோய்த் தொற்றுக் கிருமிகளை இந்த இன்டர்பெரான்கள் எதிர்த்துப் போராடி உடலில் அவை சேராமல் அழிக்கின்றன. ஆரஞ்சு கிடைக்காத போது எலுமிச்சம்பழச் சாறு அருந்தலாம்.


5.பருப்பு வகைகள் : பாதாம் பருப்பு, வேர்க்கடலை போன்ற கொட்டை வகைகளில் உள்ள வைட்டமின் ஈ, வெள்ளை இரத்த அணுக்கள் சிறப்பாகச் செயல்படத் தூண்டிவிடுகின்றன. இதனால் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கிறது. 


6.இறால் மீன் மற்றும் நண்டு : அழிந்து போன செல்களால் நோயும், நோய்த்தொற்றும் ஏற்படாமல் தடுப்பதில் இவற்றில் உள்ள துத்தநாக உப்பு உதவுகிறது. எனவே, வாரம் ஒரு நாள் இவற்றில் ஒன்றைச் சேர்த்து சாப்பிட்டு வரவும்.


7.தேநீர் : தேநீரில் உள்ள மக்னீசியம் உப்பு நோய் எதிர்ப்புச் செல்கள் அழிந்துவிடாமல் பாதுகாப்பதில் ஒரு நாட்டின் இராணுவம் போன்று செயல்படுகிறது. சூடான தேநீர் ஒரு கப் அருந்துவதால் நோய்த் தொற்றைத் தடுத்துவிடலாம்.

8.பாலாடைக்கட்டி : சீஸ் உட்பட பால் சம்பந்தப்பட்ட பொருட்களில் உள்ள கால்சியம், மக்னீசியம் உப்புடன் சேர்ந்து கொண்டு உடலில் நோய் எதிர்ப்புத் தன்மை அமைப்பு கருதி தவறாமல் ஆற்றலுடன் செயல்பட உதவுகிறது.


9.முட்டைக்கோஸ் : குடல் புண்கள் ஆறு மடங்கு வேகத்தில் குணம் பெற முட்டைக் கோஸில் உள்ள குளுட்டோமைன் என்ற அமிலம் உதவுகிறது. உணவின் மூலம் உள்ளே சென்றுள்ள நோய்த்தொற்று நுண்மங்கள் முட்டைக்கோஸால் உடனே அகற்றப்படுகின்றன. இதனால் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கிறது. முட்டைக் கோஸஸுக்குப் புற்று நோயைத் தடுக்கும் ஆற்றல் உண்டு. 


10.கோதுமை ரொட்டி : நரம்பு மண்டலமும், மூளையும் நன்கு செயல்படவும் புதிய செல்கள் உற்பத்தியில் உதவும் மண்ணீரலும், நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும். தைமஸ் சுரப்பியும் விரைந்து செயல்பட ப்ரெளன் (கோதுமை) ரொட்டியில் உள்ள பைரிடாக்ஸின் (B4) என்ற வைட்டமின் உதவுகிறது. இத்துடன் கீரையையும், முட்டையையும் தவறாமல் சேர்த்துக்கொள்ள வேண்டும்.      மேற்கண்ட உணவுப்பொருட்களில் ஏழு உணவுப் பொருட்களாவது தினமும் நம் உணவில் இடம் பெற வேண்டும். இதைச் செய்து வந்தால் நம் மருந்துவச் செலவு குறைந்துவிடும்.

ஆரோக்கிய உணவு

உயிர் வாழ உணவு தேவை என்பது சாதாரண வாக்கியம். வெறும் வாழ்தல் என்பதனைத் தவிர்த்து, ஆரோக்கியமாய் வாழ்தல் வேண்டும் என்றால், நமக்கு நிச்சயம் தேவை "ஆரோக்கிய உணவு".
ஆரோக்கிய உணவு என்றால் பெரும்பான்மையானவர்களுக்கு நினைவுக்கு வருவது, வீட்டில் அம்மா வற்புறுத்திக் கொடுத்து வேண்டாவெறுப்பாய் சாப்பிடும் பெயர் தெரியாத கீரைகள் போன்ற ஒரு சில உணவு பதார்த்தங்கள்தான். கட்டாயப்படுத்தலின் பேரில் உண்ணப்படும் ருசியற்ற உணவுகள்தான் ஆரோக்கிய உணவா? என்றால் நிச்சயம் இல்லை. பின் எவைதான் ஆரோக்கிய உணவு?

நாம் உண்ணும் அனைத்திலும் ஏதேனும் ஒன்று அல்லது பலச் சத்துக்கள் மலிந்துள்ளன. நம் உடல்நிலைக்கு ஏற்ற, நமக்கு தேவையான சத்துக்களைத் தரக்கூடிய உணவுகளை போதுமான அளவிற்கு உண்பதுதான் ஆரோக்கிய உணவு என்பதாகும். நாம் விரும்பி உண்ணும் உணவினையே, அதில் சேர்க்கப்படும் பொருட்களின் அளவினை கூட்டுதல் அல்லது குறைத்தல் மூலம் ஆரோக்கிய உணவாய் மாற்றிக் கொள்ள இயலும். ஆரோக்கிய உணவின் அடிப்படை அம்சங்கள் இந்த மூன்றுதான்,


1. நம் உடல்நிலைக்கு ஏற்றது
2. தேவையான சத்துக்கள் நிறைந்தது
3. அளவோடு உண்பது


என்னுடைய உடல்நிலைக்கு ஏற்ற உணவு எது என்று யாரேனும் கேள்வி எழுப்பினால் அதற்கு பதில் அளிப்பது மிகவும் சிரமம். ஒவ்வொருவர் உடல்நிலையும் ஒவ்வொரு விதத்தில் இருக்கும். கீரைகள், காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை பொதுவில் எல்லா தரப்பினருக்கும் பரிந்துரைக்கலாம். ஆனால் குறிப்பாக இவைதான் உங்களுக்கு பொருத்தமான உணவு என்று சொல்லவேண்டும் என்றால் தங்களுடைய உடல்நிலை குறித்த முழுமையான விபரங்கள் தேவைப்படும். ஆகையால் ஒவ்வொருவரும் தங்களது உடல் குறித்த உண்மையான நிலையினை மருத்துவரின் உதவியோடு அறிந்து வைத்து இருத்தல் மிகவும் அவசியம்.
உங்களது எடை மற்றும் உயரத்தினை அவ்வப்போது சோதித்து நினைவில் வைத்துக் கொள்ளவும். இது மிகவும் முக்கியமானது. பிறகு தங்களது எடை தங்களது உயரத்தினைப் பொறுத்து ஆரோக்கியமானதுதானா என்பதனை தெரிந்து கொள்ளவும். இதற்கு உடல் பருமன் சுட்டினை (Body Mass Index) பயன்படுத்துங்கள்.
உங்களது உடல்நிலை ஆரோக்கியமாக சாதாரண நிலையில் உள்ளதா என்பதனை மருத்துவரின் உதவியோடு அறிந்துகொள்ளவும். வெளியில் தெரியாத நோய்கள், பரம்பரை நோய்களின் தாக்கத்திற்கான வாய்ப்பு முதலிய விபரங்களையும் தெரிந்து வைத்திருத்தல் அவசியம். நோய்கள் ஏதேனும் இருப்பின், நோயின் தீவிரம், என்ன வகை, அதனால் தவிர்க்க வேண்டிய உணவுகள் எவை என்பது போன்ற கேள்விகளுக்கும் பதில் அறிந்துகொள்ளவும்.
உங்களது உடல் குறித்த விபரங்கள் தெரிந்து கொண்டபின் உணவு மற்றும் உணவுபொருட்கள் குறித்த சில அடிப்படை விசயங்களைத் தெரிந்து கொள்ளுதல் மிகவும் அவசியம்.
உணவுப்பொருட்களில் அடங்கியுள்ள சத்துக்கள், அவற்றின் பயன்கள் ஆகியவற்றைப் பற்றின தெளிந்த அறிவு, ஆரோக்கிய உணவினைத் தேர்வு செய்ய மிகவும் உதவியாய் இருக்கும்.
ஒருவர் எத்தனை முறை உண்ணவேண்டும், எவ்வளவு உண்ணவேண்டும் என்பது அவரது வயது, பால், எடை, உடல் உழைப்பு இவற்றைப் பொறுத்தது. ஒருவருக்கு நாள் ஒன்றுக்கு எவ்வளவு சக்தி(கலோரி) தேவைப்படுகின்றது என்பதனைப் பொறுத்து அவரது உணவுப்பழக்கத்தினை அமைத்துக் கொள்ளலாம். கலோரிகள் குறித்த பக்கத்தில் இதற்கான விளக்கங்கள் உள்ளன. கலோரி கணிப்பானைக் (Calorie Calculator) கொண்டும் தங்களுக்கு தேவையான கலோரிகளின் உத்தேச அளவினைக் கணக்கிட்டுக் கொள்ளலாம்.
இத்தனை விசயங்களைத் தெரிந்து கொண்டுதான் சமைக்க வேண்டுமா? உண்ணவேண்டுமா? என்ற கேள்வியை எழுப்பினால் அவசியம் இல்லை என்றுதான் பதில் சொல்லவேண்டி வரும். காலம் காலமாக பழக்கத்தில் இருந்து வரும் ஒரே மாதிரியான உணவிற்கு உடலை பழக்கப்படுத்தி கொள்வதின் மூலம் ஆரோக்கியமாக வாழ இயலும். ஆனால் இன்றைய அவசர யுகத்தில் அது பெரும்பான்மையானவர்களுக்கு சாத்தியமாக இருப்பது இல்லை. இந்த நிலையில் நாம் உண்ணும் உணவு குறித்த அறிவு நமக்கு மிகவும் அவசியம் ஆகின்றது. இதனை தெரிந்து கொள்வதினால் நாம் இழக்கப்போவது ஒன்றும் இல்லை. இதனைத் தெரிந்து கொள்ள நாம் வாழ்நாள் முழுவதையும் செலவழிக்கப் போவது இல்லை. ஆகையால் ஆரோக்கிய வாழ்விற்கு இந்த அடிப்படை விசயங்களை அத்யாவசிய அறிவாய் மாற்றிக்கொள்ளுங்கள்.

Thursday, August 11, 2011

கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்


ஒருநாள் காலையில் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், தன்னுடைய வீட்டில் அமர்ந்து, பழைய சோறு சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது வீட்டுக்கு வந்த அவரது நண்பரும்... முன்னாள் அமைச்சருமான என்.வி.நடராசன், ``என்னங்க... மதுரம் உங்களுக்கு டிபன் எதுவும் செய்து தரலையா..? பழைய சோறு சாப்பிடுறீங்க..!''

கலைவாணர் எதுவும் பேசாமால், வேலைக்காரரைக் கூப்பிட்டு, ``...இந்தா... இந்த ஒரு ரூபாய்க்கு... பழைய சோறு வாங்கிட்டு வா...'' என்றார். ரொம்ப நேரம் கழித்து வந்த வேலைக்காரர், ``ஐயா... நானும் எங்கெங்கோ அலைஞ்சிட்டேன். ஒரு இடத்திலேயும் பழைய சோறு கிடைக்கல..'' என்றார்.

``கேட்டீங்களா நடராசன்... எவ்வளவு பணம் கொடுத்தாலும் கிடைக்காத அற்புதப் பொருள்... அதனால்தான் இதை சாப்பிட்டேன்!'' என்று கலைவாணர் சொன்னதைக் கேட்டு நடராசன் மட்டுமின்றி... மதுரமும் அசந்துவிட்டார்.

காலை உணவு அவசியம்

காலையில் சாப்பிடும் உணவை எக்காரணம் கொண்டும் தவிர்க்கவே கூடாது; எட்டு அல்லது பத்து மணி நேரம் இடைவெளிக்கு பின், உடலுக்கு "பெட்ரோலாக" தேவைப்படும் உணவு அது.

காலை உணவு முறையை "பிரேக் பாஸ்ட்" என்று கூறுவர். "பாஸ்ட்"டை (உண்ணாதிருத்தலை) "பிரேக்" (துண்டிப்பது)பண்ணுவது என்று அர்த்தம். முதல் நாள் இரவு சாப்பிட்டபின், தூங்கி எழுந்திருக்கும் போது, பல மணி நேரம், சாப்பிடாமல் உடல் இயங்குகிறது. அதனால் அதற்கு, சத்துக்கள் தேவைப்படுகிறது. காலையில் சாப்பிடாமல், மதிய உணவு சாப்பிடலாம் என்று எண்ணுவது சரியல்ல. பத்து மணி நேரத்தையும் தாண்டி பட்டினி போடுவது, உடலில் உள்ள முக்கிய சத்துக்கள் குறைபாடு ஏற்படக் காரணமாகி விடும்.

என்ன சாப்பிடணும்?

காலையில் எழுந்தவுடன் காபி, பால் போன்ற பானங்கள் சாப்பிட்டு விட்டு, உணவு அல்லது சிற்றுண்டி சாப்பிடுவோர் பலர் உள்ளனர். சிலர், காலையில், ழுமு உணவு சாப்பிட்டு விட்டு, மதியம் சாதாரண அளவில் சாப்பிட்டு, இரவு டிபன் சாப்பிடுகின்றனர்.

ஆனால், காலை உணவை தவிர்ப்போரும் உண்டு. இவர்களுக்கு தான் பாதிப்பு வரும். குறிப்பாக, வீட்டு, ஆபீஸ் வேலை பார்க்கும் பெண்களுக்கு காலை உணவு மிக முக்கியம். அதை தவிர்த்தால், அவர்களுக்கு பல கோளாறுகள் வர வாய்ப்பு அதிகம்.

உணவு என்றால்.....

உடலுக்கு தேவைப்படும் சத்துக்களை தருவது தான் உணவு. கார் போன்றது உடல். கார் ஓட பெட்ரோல் தேவைப்படுவது போல, உடல் சிறப்பாக இயங்க எரிசக்தி தேவை. அந்த எரிசக்தியை தருவது சத்துக்கள் தான். அந்த சத்துக்களை நாம் உணவில் இருந்து தான் பெற வேண்டும். காலை உணவு சாப்பிட்டால், அது சிற்றுண்டியாக இருந்தாலும், உணவாக இருந்தாலும், உடலுக்கு முழு எரிபொருளை தருகிறது. சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும், மயக்கம், சோர்வு, தலைவலி, மூட்டு பாதிப்பு வராமல் இருக்கவும், காலை உணவு மிக முக்கியம்.

இரும்புச் சத்து

பெண்களுக்கு இரும்புச்சத்து மிக முக்கியம், நாம் சாப்பிடும் உணவு மூலம் அது கிடைத்தால், மனது மற்றும் உடல் ரீதியாக திடத்தன்மை ஏற்படுகிறது. காலை உணவில், மக்காச்சோள உணவை சேர்த்துக்கொள்ளலாம். "கார்ன்பிளேக்ஸ்" போன்ற பாக்கெட் உணவுகளை பின்பற்றினால், இரும்புச் சத்து கிடைக்கும். இந்தியாவில், 90 சதவீத பெண்கள், இரும்புச்சத்து குறைபாடுடன் உள்ளனர். அவர்களுக்கு காலை உணவு கைகொடுக்கும் மக்காச்சோளம் உட்பட தானிய வகை உணவுகள் மிக நல்லது. உடலுக்கும், மூளைக்கும் வலுவை தரும்.

ஸ்லிம்மாக முடியும்

காலை உணவு சாப்பிட்டு வந்தால், உடல் எடை சீராக இருக்கும். அதனால், "ஸ்லிம்"மை தொடர்ந்து பாதுகாத்து வரலாம். ஆனால், பலரும் காலை உணவை தவிர்த்தால் "ஸ்லிம்"மாக முடியும் என்று நினைக்கின்றனர். இது தவறு. காலை உணவை தவிர்த்தால், மதிய வேளையில் அதிகமாக சாப்பிட தூண்டப்படுகிறது. அதனால் எந்த உணவாக இருந்தாலும், அதிகமாக சாப்பிட்டு கொலஸ்ட்ரால் ஏறியும் விடுகிறது. காலை உணவில், புரோட்டீனும், நார்ச்சத்தும் அதிகம் தேவை. அப்படிப்பட்ட தானிய வகை உணவை சேர்த்துக் கொள்ளலாம். இதில் எரிசக்தியை வெளிப்படுத்தும் வைட்டமின் "பி" ஆன்டி ஆக்சிடென்டாக உள்ள வைட்டமின் ஏ மற்றும் சி ஆகியவை உள்ளன.

நீண்ட வாழ்நாள்

காலை உணவை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், நீண்ட நாள் வாழலாம். அதற்கேற்ப, உடலுக்கு தேவையான அனைத்துச் சத்துக்களும் கிடைத்துவிடுகின்றன. பாக்கெட், உணவு வகைகள், இப்போது கொழுப்பு நீக்கப்பட்ட நிலையில் விற்பனை செய்யப்படுகின்றன. சிற்றுண்டியாகவும் சாப்பிடலாம், சாப்பாடாகவும் காலை உணவை சாப்பிடலாம்.

எது நல்ல உணவு?

காலை உணவில் பலவகை உண்டு. தானிய வகை சத்துக்களாக சமைத்து சிற்றுண்டியாக சாப்பிட்டாலும், முழு உணவாக சாப்பிட்டாலும் நல்லது தான். ஆனால், முதல் நாள் சமைத்ததை மறுநாள் பயன்படுத்துவது கூடாது. அதனால், உடலுக்கு சத்துக்கள் கிடைக்காது. முழு அளவில் சத்துக்கள் நிறைந்ததாக இருக்க வேண்டும்.

ருசிக்கு ருசி

காலை உணவில் எல்லா சத்துக்களும் இருக்க வேண்டுமானால், தானிய வகை உணவு, பானங்கள், யோகர்ட், பால் உணவு போன்றவற்றை சேர்த்துக் கொள்ள வேண்டும். உணவுடன் பழங்களையும் சேர்த்துக் கொண்டால், உடலுக்கு இன்னும் நல்லது. காலை உணவை சாப்பிட்டவுடன், ஓய்வு எடுப்பது தவறான பழக்கம். வேலைக்கு போகாத பெண்கள் என்றால், காலாற நடக்கலாம்; ஏதாவது வேலையில் இறங்கலாம். வேலைக்கு போவோராக இருந்தால் பிரச்சனை இல்லை. ஆனால், உட்கார்ந்தபடி பல மணி நேரம் ஒரே வேலையை செய்யக் கூடாது. உடலை இயக்கும் வண்ணம் அரை மணிக்கு ஒரு முறை நடக்க வேண்டும்; குறைந்தபட்சம் நாற்காலியை விட்டு எழுந்திருக்க வேண்டும்.

மாற்றக்கூடாது

சிலர் காலை சிற்றுண்டி சாப்பிடுவர்; சிலர் முழு உணவு சாப்பிடுவர். ஒவ்வொருவருக்கும் இது மாறுபடும். ஆனால், இந்த பழக்கத்தை திடீரென மாற்றக்கூடாது. மாற்றினால், உடலுக்கு பாதிப்பு தான் அதிகம்.

சர்க்கரை வள்ளிக்கிழங்கு

சர்க்கரை வள்ளிக்கிழங்கு, நம்முடைய காரமான சமையலுக்கு ஒத்துப் போகாதது. அதை அதிகம் உணவில் சேர்க்காமல் இருந்தால் நஷ்டம் அதுக்கில்லை. நமக்குத்தான். ஏனெனில் அதிக சத்து நிறைந்த காய்கறிகளில் இதுவும் ஒன்று. இதிலுள்ள ஒரு என்ஸைம் இதன் மாவுச்சத்தை, கிழங்கு முற்றியதும் சர்க்கரையாக மாற்றி விடுகிறது. சேமித்து வைக்கும் போதும் சமைக்கும் போதும் இனிப்பு... இன்னும் அதிகமாகிறது. கிழங்கு வகையாக இருந்தாலும் இதற்கும் உருளைக்கிழங்குக்கும் சம்பந்தமில்லை. இது சுற்றிப்படரும் கொடி வகையான மார்னிங் குளோரி வகையைச் சார்ந்தது. சர்க்கரை வள்ளியின் இலைகள் மார்னிங் குளோரி வகையின் இலையைப் போன்றிருக்கும்.
சரித்திரம்: இது ஒரு அமெரிக்கச் செடி. முதலில் மத்திய, தென் அமெரிக்காவிலும், மெக்சிகோவிலும் பயிரிடப்பட்டது. மெக்சிகோ பக்கத்தில் உள்ள தீவுகளில் சர்க்கரை வள்ளிக்கிழங்கை ஆக்ஸி என்று அழைத்தனர். கொலம்பஸ் தன் முதல் கடல் பயணத்தை முடித்து ஸ்பெயினுக்கு திரும்பி வரும் போது நிறைய பொருள்களை எடுத்து வந்தார். அதில் சர்க்கரை வள்ளியும் ஒன்று. ஸ்பானியர்களுக்கு இது மிகவும் பிடித்துப் போகவே பயிரிட ஆரம்பித்தனர். அங்கிருந்து கிழக்கே போன மாலுமிகள் இதை ஆசியாவுக்குக் கொண்டு சென்றனர். அமெரிக்கப் புரட்சியின்போது சிப்பாய்களுக்கு முக்கிய உணவாக சர்க்கரை வள்ளிக்கிழங்கு தரப்பட்டது. எட்டாம் ஹென்றி காலத்தில் இங்கிலாந்தில் இது பிரபலமாகியது. பதினாறாம் நூற்றாண்டில் போர்ச்சுகீசியர்கள் இந்தியாவில் அறிமுகப்படுத்தினர்.
சர்க்கரை வள்ளிக்கிழங்கை பயிரிட சூடான, ஈரப்பதமான சீதோஷ்ண நிலை தேவைப்படுவதால் ஐரோப்பாவில் அவ்வளவு பிரபலமாகவில்லை. இந்தியா, சீனா, கிழக்கிந்தியத் தீவுகளில் அதிகமாக விளைகிறது. இப்போது ஜப்பானிலும் பரவலாக விளைவிக்கப்படுகிறது. தெற்கு ஜப்பான் தீவுகளில் காரா கிமோ என்றும், வட ஜப்பானில் ஸாட்ஜூமா-இமோ (ஜப்பானிய உருளைக்கிழங்கு) என்றும் அழைக்கிறார்கள்.
வகைகள்: முக்கியமான இரண்டு வகைகள் உள்ளன.
1. நீளமாக இளம் மஞ்சள் தோலுடன் அல்லது சிவப்புத் தோலுடன் உள்ளே வெள்ளையாக ஒரு வகை. இதன் உள்சதை காய்ந்தாற் போல இருந்தாலும் நீர் அளவு இவற்றில் மிக அதிகம்.
2. வெளியில் சிவப்புத் தோலுடன் உள்ளே ஆரஞ்சு வண்ண சதையுடன் கூடியது. இது கொஞ்சம் மிருதுவாக ஈரப்பதத்துடன் காணப்பட்டாலும் நீர் அளவு குறைவு. உள்ளே பார்ப்பதற்கு ஆரஞ்சு நிறத்தில் இருப்பதால் அமெரிக்காவில் இதைத் தவறாக (சேனைக்கிழங்கு) என்கின்றனர். உண்மையில் சேனைக்கும் இதற்கும் தொடர்பில்லை. இந்த வகை இந்தியாவில் அரிது. அமெரிக்கர்கள் விரும்புவது இந்த ஆரஞ்சு சதை கொண்டதைத்தான். ஏனெனில் விட்டமின் 'ஏ' இதில் அதிகம்.
இதைத் தவிர ஊதாக்கலர் சதையுடனும் கிடைக்கிறது. நவம்பர் மாதம் அமெரிக்காவில் நடைபெறும் நன்றி அறிவித்தல் (தேங்க்ஸ் கிவ்விங்க்) பண்டிகையின் போது இந்த வகை சர்க்கரை வள்ளிக்கிழங்கின் சீஸனாகும். நம்மூர்களில் பொங்கல் (ஜனவரி) மாதம் சீஸன்.
தேர்ந்தெடுப்பது: கையில் எடுத்தால் கனமாகக் கெட்டியாக இருக்க வேண்டும். தோல் புள்ளி எதுவும் இல்லாமல் சுத்தமாக இருக்க வேண்டும். நுனியில் சுருங்கி இருந்தால் பழசு. அழுகத் தொடங்கிய பகுதியை வெட்டி எறிந்தால் கூட அதன் வாசனை மற்ற இடங்களுக்குப் பரவி இருக்கும். வெளித்தோல் கொஞ்சம் கறுத்திருந்தாலும் கெட்டுப் போய் இதனடியில் உள்ள சதையும் கறுப்பாக மாறியிருக்கும். வாங்கியதும் மண் படிந்திருந்தால் தோலை அலம்பக் கூடாது. ஈரம், கிழங்கை சீக்கிரம் கெடுத்துவிடும். உபயோகிக்கும் முன் சுத்தம் செய்தால் போதும்.
பாதுகாத்தல்: சீக்கிரம் பயன்படுத்தி விடவேண்டிய காய்கறி இது. ஃப்ரிஜ்ஜில் வைத்தால் காய்ந்து போய் ருசியும் குறைந்துவிடும்.
உணவுச்சத்து: அதிகமான உணவுச்சத்து நிறைந்தது. சமைப்பது சுலபம். ஒருவித இனிப்புடன் ருசி பிரமாதமாக இருக்கும். பச்சையாகவும் சாப்பிடலாம். வேக வைத்து, சுட்டு, வதக்கி, பொரித்து என்று பல வகைகளில் சமைத்து சாப்பிடலாம். சர்க்கரை வள்ளிக்கிழங்கின் தோலும் சாப்பிடக் கூடியது. இதில் நிறைய நார்ச்சத்து உள்ளதால் உரிக்காமல் சாப்பிடுவது நல்லது.
ஒரு மீடியம் சைஸ் சர்க்கரை வள்ளிக்கிழங்கில் இருக்கும் உணவுச்சத்து: கலோரி 130, கொழுப்புச்சத்து 0.39 கிராம், புரோட்டின் 2.15 கிராம், கார்போ ஹைட்ரேட் 31.56 கிராம், நார்ச்சத்து 3.9 கிராம், சோடியம் 16.9 மில்லிகிராம், பொட்டாசியம் 265.2 மில்லி கிராம், கால்சியம் 28.6 மில்லி கிராம், விட்டமின் சி 29.51 மில்லி கிராம், விட்டமின் ஏ-26081 IU.
சமையல் வகைகள்:
சாலட், ஜூஸ், சூப்: சர்க்கரை வள்ளிக்கிழங்கைப் பச்சையாகவே துருவி சாலட்டில் சேர்த்தால் ருசியோடு விட்டமின் 'ஏ' சத்தும் நேரடியாக கிடைக்கும். ஜூஸாக அரைத்து பச்சையாக சூப்பில் சேர்க்கலாம். ஆரஞ்சு வண்ணக் கிழங்கைத் துருவி சேர்த்தால் சாலட், சூப் சமையல் வகைக்கு வண்ணம் சேர்ப்பதோடு காரட் போல காட்சியளிக்கும். சர்க்கரை வள்ளிக்கிழங்கை சமைக்க அதிக எண்ணெய் தேவைப்படாது. வதக்கினாலும் எண்ணெய் குறைந்த அளவே இழுக்கும். சர்க்கரை வள்ளிக்கிழங்கின் வாசனையை அதிகமாக்க துண்டு போட்டு கொஞ்சம் ஆப்பிள் ஜூஸ் சேர்த்து குறைந்த தீயில் சமைத்தால் ருசியும், பளபளப்பும் வரும்.
பாயசம்: இதற்கு சர்க்கரை குறைவாக பயன்படுத்தினாலே போதும். சர்க்கரை வள்ளிக்கிழங்கை வேக வைத்து தோலுரித்துக் கொள்ளவும். பின்பு அதை நன்றாக மசிக்கவும். பாலை சுண்டக்காய்ச்சி, அதில் மசித்த கிழங்கை சேர்த்து கொதிக்க வைக்கவும். ஏலப்பொடி, குங்குமப்பூ, முந்திரி பருப்பு, உலர்ந்த திராட்சையை நெய்யில் வறுத்துப் போடவும்.