Sunday, May 1, 2011

எங்கள் வேட்பாளருக்கு ஓட்டுப் போடாதீர்கள்!

1952ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கு வாக்குச் சேகரிப்பிற்காய் சுற்றுப் பயணம் மேற்கொண்டார் அன்றைய பிரதமர் ஜவஹர்லால் நேரு. இன்றைய மத்தியப் பிரதேசம் அப்போது விந்தியப் பிரதேசம்.

அதில் ரேவா சட்டப் பேரவைத் தேர்தலுக்குக் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ரேவா சமஸ்தானத்தின் அரசரான ராவ் ஷிவ் பகதூர் சிங் (மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சராக இருந்த மூத்த காங்கிரஸ் தலைவர் அர்ஜுன் சிங்கின் தந்தை).

ரேவாவில் பிரம்மாண்டமான பேரணியில் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்ய வந்த நேருவிற்கு வேட்பாளரைக் குறித்துச் சில தகவல்கள் கிடைக்கின்றது. விறுவிறுவென்று மேடையேறிப் பேசத் தொடங்கினார் நேருஜி.

"காங்கிரஸ் கட்சியின் சார்பில் இந்தியா முழுவதும் சட்டப் பேரவைக்கும், மக்களவைக்கும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளோம். நாங்கள் நிறுத்தியிருக்கும் ஒவ்வொருவரையும் நேரு தேர்ந்தெடுத்து நிறுத்தியிருக்கிறார் என்று நீங்கள் நினைத்தால் தவறு. அது சாத்தியமில்லை.

அந்தந்த மாவட்டக் கமிட்டி மற்றும் பிராந்தியக் கமிட்டிகள் பரிந்துரை செய்பவர்களை டெல்லியில் ஏற்றுக் கொண்டு அறிவித்துள்ளோம். காங்கிரஸின் எல்லா வேட்பாளர்களும் அப்பழுக்கில்லாதவர்கள், தியாகிகள், தரமானவர்கள் என்று நீங்கள் நினைத்துவிடக்கூடாது.

எனக்குக் காங்கிரஸ் முக்கியம். அதைவிட எனக்கு ஜனநாயகம் முக்கியம். ஜனநாயகம் காப்பாற்றப்பட வேண்டுமெனில் நல்லவர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். கொலைகாரர்கள், குற்றப் பின்னணி உடையவர்கள், சமூக விரோதிகள், கள்ள மார்க்கெட் பேர்வழிகள், ஜாதி வெறி பிடித்தவர்கள் இப்படிப்பட்டவர்கள் காங்கிரஸ் வேட்பாளராகவே இருந்தாலும் தேர்ந்தெடுத்து விடாதீர்கள்.

இங்கே போட்டியிடும் ராவ் ஷிவ் பகதூர் சிங் மீது பல கிரிமினல் வழக்குகள் இருக்கிறது. விந்தியப் பிரதேச அமைச்சரவையிலிருந்த அவர் பன்னா வைரச் சுரங்க நிறுவனத்துக்குச் சாதகமாக போலி ஆவணங்கள் தயாரிக்க 25,000 ரூபாய் லஞ்சம் வாங்கியிருப்பதாக சற்று முன் எனக்கு நம்பகமான தகவல் கிடைத்தது.

இப்படிப்பட்டவர்களை ஜவஹர்லால் நேருவின் பிரதிநிதி என்று நினைத்துத் தேர்ந்தெடுத்தால், அது ஜனநாயகத்துக்குச் செய்யும் துரோகம். உங்களுக்குப் பிடித்தமான கட்சி நிறுத்தினாலும் வேட்பாளர்களைக் கண்ணை மூடிக் கொண்டு ஆதரிக்காதீர்கள். எங்களது காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராகவே இருந்தாலும், ராவ் ஷிவ் பகதூர் சிங் ஒரு தவறான வேட்பாளர் இவரைத் தோற்கடித்து, ஜனநாயகத்தைப் பாதுகாப்பது உங்கள் கடமை'' பேசிவிட்டுச் சென்றார் நேரு.

ரேவா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் டெபாசிட் இழந்தார். அவரது குற்றம் நிரூபிக்கப்பட்டு அதே ரேவா சிறைச்சாலையில் மன்னர் ராவ் ஷிங் பகதூர் சிங் இறந்தார்.

இந்தத் தேர்தல் களத்தில் ஒரேயொரு அரசியல்வாதியாவது இந்த நேர்மையின் ஒளியில் தென்படுகிறாரா?

தேடிப்பாருங்களேன்!

No comments: