Sunday, May 1, 2011

உங்கள் முடிவு உறுதியானதா?

ஒரு கிராமத்து விவசாயி சந்தையில் ஆடு வாங்கினார். அதை பார்த்துக்கொண்டிருந்த மூன்று திருடர்கள் அந்த ஆட்டை எப்படியாவது
திருடிக்கொண்டு செல்ல முடிவு செய்தார்கள். விவசாயி ஆட்டை தோள் மேலே தூக்கிக்கொண்டு தன் கிராமத்துக்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது திருடர்களில் முதல் திருடன் விவசாயிடம் சென்று "என்னன்னே! நாயை தூக்கிட்டு போறிங்க, அறிவில்லையா?" என கேட்க, அந்த விவசாயி "தம்பி உனக்கு சரியா கண்ணு தெரியாத இது நாயில்ல, ஆட்டுக்குட்டி" என சொல்லிவிட்டு நடந்தார்.
கொஞ்ச தூரம் தள்ளி இரண்டாவது திருடன் வந்தான்,அவன் விவசாயியை பார்த்து "ஏன் செத்த கன்னுக்குட்டியை தூக்கிட்டு போறிங்க? என கேட்டான். அதற்கு விவசாயி "இது செத்த கன்னுக்குட்டி இல்லப்பா, உயிரோட இருக்கிற ஆட்டுக்குட்டி" என சொல்லிவிட்டு நடந்தார்.
இன்னும் கொஞ்ச தூரம் சென்றதும் மூன்றாவது திருடன் வந்தான், அவன் விவசாயிடம், " என்னது..ஓனாயை தூக்கிட்டு பேறீங்க உங்களுக்கு பைத்தியமா?" என்றான். திரும்பவும் விவசாயி "யாருக்கு உனக்குத்தான் பைத்தியம், இது ஓனாய் இல்லை ஆட்டுக்குட்டி" என சொல்லிவிட்டு நடந்தார்.
ஆனாலும் விவசாயி மனதில் ஒரு பயம் வந்துவிட்டது. "நாம சந்தையிலே வாங்குனது ஆட்டுக் குட்டிதானே, ஆனா ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு மாதிரி தெரியுதே! இது ''பேயா'' இருக்குமோ!" என்று தனக்குள் நினைத்தவர், உடனே ஆட்டுக்குட்டியை கிழே போட்டுவிட்டு தனது கிராமத்தை பார்த்து ஓட்டமாக ஓடி விட்டார். தங்களின் திட்டம் பலித்துவிட்ட சந்தோஷத்தில், திருடர்கள் ஆட்டுக்குட்டியை தூக்கிக்கொண்டு சென்று விட்டனர்.
இக் கதையின் நீதி: முடிவெடுப்பதற்கு முன்னால் யோசிக்கலாம். ஆனால் முடிவெடுத்த பின்பு ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்தை சொல்லதான் செய்வார்கள். நீங்கள் எடுத்த முடிவில் உறுதியாக இருங்கள்.

No comments: